தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (3)
தில்லானா மோகனாம்பாள். (3 )
ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.
வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.
சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.
நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.
அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..
இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.
வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.
சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.
1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டி என்ற அளவுக்கு இருந்தது.
தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையாநாயுடு,
நாதஸ்வர இசைக்காக அவர் நாடியது நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.
இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.
விவேகானந்தன்
Comments