வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா; தடுப்பு பணியில் தேர்தல் ஆணையம்..
வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா; தடுப்பு பணியில் தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பலநூறு கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுத்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலம்போல் இல்லாமல் இம்முறை பண விநியோகத்துக்கு தொழில்நுட்ப வசதிகளும் கைகொடுப்பதாகக் கூறப்படுகிறது.
‘கூகுள் பே’, ‘போன் பே’ உள்ளிட்ட தனியார் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு, ‘கூகுள் பே’ மூலம் பணம் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரிக்கும் பணிகளை அரசியல் கட்சியினர் ரகசியமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற பணப்பரிமாற்றங்களை தடுப்பதற்காக வங்கி பணியாளர்கள், சைபர் கிரைம் போலீஸார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
செயலி மூலம் பணம் அனுப்பப்பட்டால் அதை ஒரு ஆதாரமாக எடுத்து வழக்குப்பதிவு செய்யலாம் என்று போலீஸாருக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்தில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments