தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (2)

 தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி  தொடர் பகுதி (2)


தில்லானா மோகனாம்பாள்..



சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் ..


1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள்.


இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். 


இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?


கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.


ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். 


வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.


கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ராமசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா.


சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார். 



வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும்

தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம். 


சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.



தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள்.


எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை. 


தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார். 


ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார்

வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார். 


உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.


ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது.. 


கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.



அடுத்து கதாநாயகி?






( தொடரும்)

விவேகானந்தன்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி