கல்லீரல் நோய்க்கு குட்பை
கல்லீரல் நோய்க்கு குட்பை சொல்லி விடுங்கள்
ஒரு நாளில் 500 விதமான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும், ஆனால் உணவு மட்டும்தான் உங்களுக்குச் சம்பளம்' என்று யாராவது கூறினால் அவரை முறைத்துத்தான் பார்ப்போம். ஆனால் அவ்வளவு வேலைகளைத்தான் தினந்தோறும் செய்துகொண்டிருக்கிறது நம் உடலின் அதிசய உறுப்பான 'கல்லீரல் (Liver)'! ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது என்று எந்நேரமும் கல்லீரல் படு பிஸி...
நோய் முற்றும் முன்பே காத்துக்கொள்ளக் கூடிய முக்கிய உறுப்புகளில் முதலிடத்தில் இருப்பது கல்லீரல்தான்! கல்லீரல் தொடர்பான நோய்களில் 90% தவிர்க்கக்கூடியவை என்றால் நீங்கள் நம்புவீர்களா?
வாடிக்கையாக மதுபானம் அருந்துகிறீர்களா?
ஒரு முதலாளி அற்ப சந்தோஷத்திற்காக தன் வேலையாளுக்கு அதிக வேலை கொடுத்து, அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். ஆனாலும்கூட வலியை எல்லாம் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த அப்பாவி வேலைக்காரர் அந்த முதலாளிக்காகவே வேலை பார்க்கிறார். அதீதமாக மது அருந்துபவர்களும் இப்படித்தான் கல்லீரலைக் காயப்படுத்துகின்றனர், தன்னைத் தானே சரிசெய்துகொள்ளக்கூடிய அம்சம் கொண்ட ஒரே உறுப்பான கல்லீரலும் குடிமகன்கள் செய்யும் கொடுமைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு இயங்குகிறது!
'மேல்நாட்டினர் தினமும் மது அருந்துகிறார்களே?' 'என் நண்பர் குடிநீரைவிட அதைத்தான் அதிகம் அருந்துகிறார், அவருக்கெல்லாம் கல்லீரல் நோயே இல்லையே?' பலரும் என்னிடம் நாள்தோறும் கேட்கும் கேள்விகள் இவை... மேல்நாட்டினர் நம்மூர்க்காரர்கள் போல போதை தலைக்கேறி புத்தியைக் கிறங்கடிக்கும்வரை குடிப்பதில்லை! மேலும், இங்கு விற்கப்படும் பானங்களில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் கேள்விக்குறியே. எனவே அதிகபட்சம் 30 மில்லி அருந்தலாம். டாக்டர் சொல்லிவிட்டார், இனிமேல் அளந்து குடிக்கிறேன் என்று இறங்காதீர்கள். குடியை விட முடியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த அறிவுரை.
டாக்டர் ஜாய் வர்கீஸ்
இந்தியர்களே உஷார்!
குடிப்பழக்கத்துக்கு அடுத்து 'டிரைகிலிசரைட்ஸ் (Triglycerides)' எனப்படும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய எதிரியாக திகழ்கிறது. மரபியல் ரீதியாகவே ஆசிய மக்களுக்கு கொழுப்பு சார்ந்த கல்லீரல் பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. மேலும், இந்திய உணவுகள் பெரும்பாலும் மாவுச்சத்து நிறைந்ததாகவே இருப்பதால், அதீதமாக உட்கொள்ளும்போது இந்த மாவுச்சத்து டிரைகிலிசரைட்ஸ் படிமங்களாக உருமாறி கல்லீரலில் தேங்கி, அதை நாசம் செய்கின்றது. இதையே 'ஃபேட்டி லிவர் டிசீஸ் (Fatty Liver Disease) என்கிறோம். அதீத கொலஸ்டிரால், நீரிழிவு மற்றும் தைராய்டு நோய் உள்ளவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.
ஹெப்படைட்டிஸ் வைரஸ்
கல்லீரல் செல்களைத் தாக்கக்கூடியவை ஹெப்படைட்டிஸ் வகை வைரஸ்கள். இதில் ஹெப். 'பி (B)' வைரஸுக்கு தடுப்பூசி உண்டு. இப்போதெல்லாம் குழந்தைகள் பிறந்த ஒன்றிரண்டு மாதங்களில் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. அந்தக்காலத்தில் தடுப்பூசி இல்லை, எனவே பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட முந்தைய தலைமுறையினர் இந்த வைரஸினால் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. இவர்கள் குழந்தைகள் நல மையத்தில் குறைவான கட்டணமே கொண்ட ஹெப். பி டெஸ்ட் செய்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஹெப். பி 'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், இது கல்லீரல் புற்று நோயை உண்டாக்கக்கூடியது.
அடுத்து ஹெப். 'சி(C)' வைரஸ். இதற்கு தடுப்பூசி இல்லை என்றாலும் ஆன்டி வைரல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் தொற்றை முழுவதுமாக நீக்கலாம். ஆனால் இடையே மருந்து எடுத்துக்கொள்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. இதனால் கல்லீரல் சார்ந்த பல பின்விளைவுகள் ஏற்படும்.
பிற நோய்கள்...
வில்ஸன்ஸ் நோய்: கல்லீரலால் செம்புத் தாதுவை வெளித்தள்ள முடியாமையே இந்த நோய். இந்த நோயாளிகள் மட்டும் செம்புப் பாத்திரங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஹிமேட்டோகுரோமேட்டோஸிஸ்: கல்லீரலால் இரும்புத் தாதுவை வெளித்தள்ள முடியாமை இந்த நோய்.
ஆட்டோ இம்யூன் நோய்: சில சமயம் நம் நோய்த்தடுப்பு ஆற்றலே நமக்கு எதிராக வேலை செய்யும். இதுதான் ஆட்டோ இம்யூன் நோய். இந்நோய், இளம்பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது.
பைலியரி ஆட்ரீஷியா: குழந்தைகளுக்கு ஏற்படும் பித்தப்பை மற்றும் கல்லீரல் சார்ந்த இந்நோயை, பிறந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே கண்டறிய முடியும்.
ஃபைப்ரோசிஸ் மற்றும் சிர்ரோசிஸ்: மேற்கண்ட காரணங்களால் கல்லீரலில் செல்கள் செயலிழந்து, இறந்த செல்கள் அதிகரிப்பதை ஃபைப்ரோசிஸ் என்றும், 80% மேல் பாதிக்கப்பட்டு கல்லீரல் சுருங்கி கருங்கல் போல இறுகிப்போவதை சிர்ரோசிஸ் என்றும் அழைக்கிறோம். சிர்ரோசிஸ்தான் கல்லீரல் பாதிப்பில் இறுதி நிலை. இந்த நிலையை எட்டுவதற்கு குறைந்தது 10
- 15 வருடங்கள் ஆகலாம்.
எப்போதும் சோர்வா?
கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறி உடற்சோர்வாகும். இதனால் ஒருவரின் செயல்திறன் குறைகிறது, தொடர்ந்து வாழ்க்கைத் தரமும் கெடுகிறது. எனவே, கல்லீரல் நோய், நோயாளியை மட்டுமின்றி, அவரின் குடும்பத்தையும், சமுதாயத்தையும் ஒருசேர பாதிக்கிறது. இது தவிர, மஞ்சள் காமாலை, அடிவயிற்றில் வலி, கறுமையான சிறுநீர், வெளிறிய நிறத்தில் மலம், மூட்டுகளில் வீக்கம், வாந்தி, மயக்கம், தோல் அரிப்பு, பசியின்மை இருந்தாலும் உடனடியாகக் கல்லீரலைக் கவனியுங்கள்...
குளோபல் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்தில் நடத்தப்பட்ட 100 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான காரணங்களின் அட்டவணை. இதில் 90% நோய்கள் தவிர்க்கப்படக்கூடியவை
மேற்கண்ட படம் மூலம், மது மற்றும் கொழுப்பினாலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவ்விரு காரணங்களையும் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிச்சயம் தவிர்க்க முடியும்!
சிர்ரோசிஸ், ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் பைலியரி ஆட்ரீஷியா மற்றும் பிற முற்றிய நிலை கல்லீரல் பாதிப்புகளுக்கு மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, இந்தப் புது வருடம் முதல் உங்களிடம் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள், ஆரம்ப நிலையிலேயே தயக்கமின்றி பரிசோதனைகளைச் செய்துகொண்டு, கல்லீரல் நோயைத் தடுத்து நலத்தோடும் நம்பிக்கையோடும் உற்சாகமாய் வாழ்ந்திடுங்கள்!.......
Comments