மலேசியா வாசுதேவன்.

 மலேசியாவின் குரல் தனி ரகம்; புது ஸ்டைல்;



பாட்டுகளில் பல வகை உண்டு. இந்தப் பாடலை இவர் பாடினால் நன்றாக இருக்கும். அந்தப் பாட்டு அவர் பாடினால் செட்டாகாது என்றெல்லாம் வகைபிரித்து, குரல்பிரித்துச் சொல்லுவோம். ஆனால், அவரின் குரலுக்கு வகையும் இல்லை, தொகையும் இல்லை. ’இந்தக் குரல் இந்தமாதிரியான பாட்டைத்தான் பாடமுடியும்’ என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட குரல் அது. அப்படியொரு வசீகரக்குரல். எல்லையே இல்லாத குரல். தேவமிர்தக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்... மலேசியா வாசுதேவன்.
இளையராஜா குழுவின் ஆதிகாலத்து நண்பர். வாய்ப்புகள் தேடினார். வந்தன. சொல்லிக் கொள்ளும் படியில்லை. எவரும் சொல்லி வியக்கும்வகையில் இல்லை. ஏகப்பட்ட பேரின் கனவுகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கதவு திறந்துவிட்ட ’16 வயதினிலே’, மலேசியா வாசுதேவனுக்கு திறந்துவிட்டது. ‘ஆட்டுக்குட்டி முட்டை’யுடனும் ‘செவ்வந்திப் பூமுடிச்சு’மாக வந்தவரை அள்ளிக்கொண்டது இசையுலகமும் திரையுலகமும்!
அப்படிக் கிடைத்த ‘16 வயதினிலே’ பட வாய்ப்பும் சுவாரஸ்யம். எஸ்.பி.பி.யும் இளையாராஜா சகோதரர்களுக்கும் பாரதிராஜாவுக்கும் செம தோஸ்த். முதல்நாள் ரிக்கார்டிங் செய்ய பாட்டெல்லாம் ரெடி. ஆனால் எஸ்.பி.பி.க்கு சற்றே நலமின்மை. ‘என்னய்யா இது..’ என்று பாரதிராஜா புலம்ப, ‘புலம்பாதே. அமைதியா இரு’ என்று சொன்ன இளையராஜா, திரும்பினார். ‘டேய் வாசு. டிராக் ஒண்ணு பாடணும். அதுவும் கமலுக்குப் பாடணும். சரியாப் பாடினா, இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு வெற்றிப் பயணம் ஆரம்பமாயிரும்டா. நல்லாப் பாடு’ என்று மலேசியா வாசுதேவனிடம் சொல்லிப் பாடவைத்தார் ராஜா. எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ரெண்டு பாடலுமே சூப்பர் ஹிட்.
வழக்கமான குரலாக இல்லாமல் இருந்தால், அந்தக் குரலை விடவே மாட்டார் இளையராஜா. தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார் இளையராஜா. ரகம்ரகமாய், தினுசுதினுசான பாடல்களை வழங்க, அந்தப் பாட்டுகளை பந்தாக்கி, விளாசித்தள்ளினார் மலேசியா வாசுதேவன். ரசிக மனங்களில் உட்கார்ந்துகொண்டார்.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ?’, ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்ற பாட்டும் பட்டிதொட்டியெங்கும் பற்றிக்கொண்டது. ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கமலுக்கு. இன்னொன்று மலேசியாவுக்கு. ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘வான் மேகங்களே’ பாடலும் ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலும் மலேசியா வாசுதேவனின் குரலை, தனித்துவமாக்கிற்று. இதில், ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ கேட்போர் மனதைத் துளைத்து ஊடுருவியது. ஊடுருவித் துளைத்தது.
கமலுக்கும் ரஜினிக்கும் எஸ்.பி.பி. குரல் அப்படியொரு பொருத்தத்துடன் இருந்தது. ஆனாலும் ‘கல்யாணராமன்’ படத்தில் ‘காதல் தீபமொன்று’ பாடல் மனசைத் திருடிவிடும். ‘தர்மயுத்தம்’ படத்தில் இரண்டு பாடல்கள் மலேசியாவுக்கு. ‘ஒருதங்கரதத்தில்...’, ‘ஆகாய கங்கை’ என இரண்டு பாடல்களும் தேனாகவும் தித்தித்தது; பாலாகவும் இனித்தது.
ரஜினிகாந்துக்கு இன்று வரை மார்க்கெட் வேல்யூவை உயர்த்திய பாடல்களின் வரிசையில் ‘முரட்டுக்காளை’ படத்தின், ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாட்டுக்கு தனியிடம் உண்டு. இந்தப் பாட்டு அடித்த ஹிட்டுக்கு எல்லையே இல்லை. இதேபோல், கமலுக்கு ‘சட்டம் என் கையில்’ படத்தில் ஒரு பாடல். நீளம் காரணமாக அந்தப் பாடல் படத்தில் இல்லாமல் போனது. ஆனால் அந்தப் பாடல் நம் மனங்களில் சப்பளங்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறது. அந்தப் பாடல்... ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ !
கே.பாக்யராஜின் முதல் இயக்கமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில், கங்கை அமரன் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல், இன்று வரைக்கும் சூப்பர் ஹிட் வரிசையை விட்டு விலகவே இல்லை. ‘காதல் வைபோகமே காணும் நன்னாளிதே’ பாடலை யாரால்தான் மறக்கமுடியும்? பி.வாசு மற்றும் சந்தானபாரதி இருவரும் பாரதி வாசு எனும் பெயரில் முதன்முதலாக இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில், ‘கோடை கால காற்றே’ படத்தில் அப்படியொரு பேஸ்வாய்ஸில் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன்.
இதேபோல், கங்கை அமரன் இயக்கிய முதல் படமான ‘கோழிகூவுது’ படத்தில் ‘பூவே இளையபூவே’ என்று ஹைபிட்ச்சிலும் பாடியிருப்பார். பாண்டியராஜனின் முதல் இயக்கமான ‘கன்னிராசி’ படத்தில் ‘சுகராகமே சுகபோகமே...’ பாடலை சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் போல் பாடியிருப்பார். ‘ஆளை அசத்தும் மல்லியே மல்லியே...’ என்று டூயட் பாடலில் காதலில் வழியவிட்டிருப்பார். ‘ஆண்பாவம்’ படத்தில், ‘குயிலே குயிலே பூங்குயிலே’ பாடலை இப்போதும் டீக்கடைகளில் எங்கேனும் கேட்டால், கேட்ட இடத்தில் அப்படியே நின்று கேட்டு ரசித்துச் செல்பவர்கள் ஏராளம். பத்திரிகையாளரும் பிஆர்ஓவுமான சித்ரா லட்சுமணன் முதன் முதலாக தயாரித்த, பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ படத்தில் நக்கலும் நையாண்டியுமாக ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ பாடியிருப்பார்.
ஐ.வி.சசியின் இயக்கத்தில் ரஜினிக்கு ‘காளி’ படத்தில் ‘அலையாடும் பூங்கொடியே’ என்று அவர் பாடிய பாடல் நமக்குள் அலையடிக்க வைத்துவிடும். இயக்குநர் மகேந்திரனின் நண்டு’ படத்தில் ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ பாடலைப் பாடிய விதத்தில், இயற்கையை வணங்கவைத்துவிடுவார் மலேசியா வாசுதேவன். அடுத்தவாரிசு’ படத்தில் இவர் பாடிய ‘ஆசை நூறுவகை’ பாட்டு, எழுந்து, ஆடவைத்துவிடும். ரஜினிக்கு ‘சொல்லி அடிப்பேனடி’, ‘என்னோட ராசி நல்லராசி’ பாடல்கள் ரஜினியே பாடுவது போல் இருந்தது.
மலேசியா வாசுதேவனின் குரல் தனி ரகம். சோகப்பாட்டுக்கு அழவைப்பார். காதல் பாட்டில் குதூகலப்படச் செய்வார். வீரமான கோபமான பாடலைப் பாடினால், அதைக் கேட்டு நம்மைப் பொங்கியெழச் செய்வார். ’ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே’ பாடலை எப்போது கேட்டாலும் அனல் நம் மீது வந்து தெறிக்கும். அதேபோல், கிண்டல் பாடல்களில் இன்னும் விளையாடுவார். சகலகலாவல்லவனின் ‘கட்டவண்டி கட்டவண்டி’ சின்ன உதாரணம்.
‘என்னுயிர்த்தோழன்’ படத்தில் ‘குயிலுக்குப்பம்’ பாடலும் ‘ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி’ பாடலும் என ரெண்டே பாடல்கள். ரெண்டுமே மலேசியாவின் ராஜாங்கம்தான். விஜயகாந்துக்கு ‘அம்மன்கோவில் கிழக்காலே’ படத்தில் ‘ஒருமூணு முடிச்சால முட்டாளா ஆனேன்’ பாட்டு புலம்பலும் நக்கலும் கலந்துகட்டிய பாட்டு. ‘படிக்காதவன்’ படத்தில், ‘சிவாஜிக்காக ‘ஒருகூட்டுக்கிளியாக, ஒருதோப்புக் குயிலாக’ என்று பாடினார். பிறகு ‘முதல் மரியாதை’யில் எல்லாப் பாடல்களையும் பாடினார். டி.எம்.எஸ்.க்கு அடுத்தபடியாக சிவாஜிகணேசனுக்கு மலேசியாவின் குரல் மிகப்பிரமாதமாக பொருந்திவிட்டதே என்று எல்லோரும் வியந்து போனார்கள்.
எஸ்.பி.பி.யும் மலேசியாவும் இணைந்து பாடிய பாட்டுகள் டபுள் தமாக்கா. அதற்கான உதாரணம்... ‘என்னம்மா கண்ணு செளக்கியமா?’. அதேபோல, இரண்டு கேரக்டருக்கும் இரண்டு கமலுக்கும் இவர் பாடிய ‘மாமாவுக்கு குடும்மா குடும்மா’ அப்படியே கமலே பாடுவது போல் ரகளை பண்ணியிருப்பார் மலேசியா வாசுதேவன். ரஜினிக்கு ‘புதுக்கவிதை’யில் ‘வா வா வசந்தமே’ பாடலும் அப்படித்தான்!
மலேசியா வாசுதேவனின் குரல், எந்தப் பாடலைப் பாடினாலும் நம்மைச் சொக்கவைக்கும்; சுண்டியிழுக்கும். கட்டிப்போடும்; கலாட்டா பண்ணும். குதூகலப்படுத்தும்; கொண்டாடவைக்கும்.
பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மூலமாக நடிக்கவும் வந்தார். அதுவும் மிரட்டலான வில்லன். மணிவண்ணனின் ‘முதல்வசந்தம்’ படத்தில், சத்யராஜுடன் இணைந்து அவர் பண்ணிய ரவுசும் வில்லத்தனமும் இன்னொரு உயரத்துக்கு அழைத்துச் சென்றது அவரை!
நன்றி: இந்து தமிழ் திசை
. பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காயம் ஆறாமல் உடல்நிலை மோசமான தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையாக சிகிச்சை அளித்தும் அவர் இதே பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு உயிரிழந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி