ராபின் உத்தப்பா இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு

 ஐபிஎல் 2021 டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்துள்ளார்.



ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் பிப்ரவரி 11 ஆம் தேதி பிசிசிஐ நடத்துகிறது. இந்த மினி ஏலம் நடைபெறுவதற்குள் ஐபிஎல் அணிகள் தங்கள் தக்கவைப்பு வீரர்களையும், விடுவித்த வீரர்களையும் ஜனவரி 20-ம் தேதிக்குள் அறிவிக்க பிசிசிஐ கெடு நிர்ணயித்திருந்தது. இதன்படி ஐபிஎல்லின் 8 அணியின் நிர்வாகமும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்பு பல வீரர்களை விடுவித்தது.


இதற்கு சிஎஸ்கே அணியும் விதிவிலக்கல்ல. சிஎஸ்கே அணியிலிருந்து மொத்தம் 6 வீரர்களுக்கு "குட்பை" சொல்லப்பட்டது. அதில் ஷேன் வாட்சன் கடந்த சீசன் முடிந்தவுடன் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இதனையடுத்து 5 வீரர்களுக்கு நேற்று "எண்ட் கார்டு" போட்டது சிஎஸ்கே. அதில் ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனு சிங் ஆகியோரின் சிஎஸ்கே பயணம் முடிவடைந்தது.


கடந்த சீசனில் விளையாடாத சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதில் ஆச்சர்யமாக கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை இப்போது சிஎஸ்கே தங்களது அணிக்காக எடுத்துள்ளது. 35 வயதான ராபின் உத்தப்பா கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஆறாவது அணி சிஎஸ்கே.


ஏன் ராபின் உத்தப்பா ?


எத்தனையோ இளம் வீரர்கள் இருக்கும்போது ஏன் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே எடுக்க வேண்டும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கக் கூடும். அதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. ராபின் உத்தப்பா கர்நாடக மாநில வீரர். இந்தியாவுக்காக 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார் ராபின் உத்தப்பா. 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்களும் 6 அரை சதங்களும் அடித்தவர் உத்தப்பா.


2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான டி20 அணியில் விளையாடி அசத்தியவர் ராபின் உத்தப்பா. இதுவரை 13 டி30 போட்டிகளில் 249 ரன்களை குவித்தார், அதில் ஒரு அரை சதமும் அடங்கும். இந்தியாவுக்காக அவர் கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள்,டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின்பு இந்திய அணிக்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை. இதுவரை 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி உள்ள உத்தப்பா 4607 ரன்களை ஐபிஎல் ஆட்டத்தில் குவித்துள்ளார்.


ராபின் உத்தப்பா தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர். சிஎஸ்கேவை பொறுத்தவரை வாட்சன் இல்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது. ஆனால் உத்தப்பாவை அணிக்குள் கொண்டு வரும்போது ருதுராஜ் கெய்க்வாட் உடன் அவர் களமிறங்குவார் என தெரிகிறது. இதனையடுத்து டூப்ளசிஸ் 3 ஆவது ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பும் அதிகரிக்கும், இது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.


கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உத்தப்பாவை தொடக்க வீரராக முதலில் களமிறக்காமல் சோதித்தது. இந்நிலையில் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் ஓப்பனிங் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இப்படியான அதிரடி வீரரை தொடக்க வீரராக களமிறக்காமல் அவரின் திறமையை வீணடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.


2014 ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா மொத்தம் 660 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் விருதை வென்றார். அந்த சீசனில் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி சாம்பியன் ஆனது. 2019 இல் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். ராபின் உத்தப்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களை கொண்டிருந்தாலும் அவர் எந்தவொரு அணிக்கும் முக்கியமான பேட்ஸ்மேன் என்பதை மறுப்பதற்கு இல்லை.      

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி