இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும்

 இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.



மம்தா பானர்ஜியின் கோரிக்கை காலத்திற்கேற்ற தேவை என அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


'ஒரே நாடு! ஒரே தலைவர்' எனும் அணுகுமுறை ஏற்புடையதல்ல; எல்லாவற்றிற்கும் எதற்கு டெல்லியைச் சார்ந்திருக்க வேண்டும்? தலைநகரங்களைப் பரவலாக்க வேண்டும். அதற்கு இந்திய நாட்டிற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியிருப்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த கருத்தாகும். அதனை வரவேற்று முழுமையாக ஏற்கிறேன்.


தலைநகரங்களைப் பரவலாக்குவதன் மூலமே வளர்ச்சியைக் கடைக்கோடி வரை கொண்டு செல்ல முடியும் என்பதையுணர்ந்தே, தமிழ்நாட்டில் ஐந்து மாநிலத் தலைநகரங்கள் இருக்க வேண்டும் எனும் முழக்கத்தை முன்வைக்கிறோம். அதேபோல, இந்தியாவிற்கும் நான்கு தலைநகரங்கள் வேண்டும் எனும் சகோதரி மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிந்து, அத்தோடு நான்கு தலைநகரங்களில் ஒரு தலைநகரம், தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் எனும் எமது கோரிக்கையையும் இணைத்து அதனையும் முன்வைக்கிறேன்.


அதிகாரப் பரவலாக்கலும், மாநிலங்களின் தன்னாட்சியுரிமையுமே நாட்டின் ஒருமைப்பாட்டையும், தேசிய இனங்களிடையே சமத்துவத்தையும் தக்கவைத்து, நாட்டின் இறையாண்மையைக் காக்கத் துணைநிற்கும் என்பதையுணர்ந்து, சகோதரி மம்தா பானர்ஜியின் இக்கருத்துக்குத் வலுசேர்க்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனங்களின் தலையாயக் கடமையாகும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி