ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகஸ்ட் 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்
ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். பெப்ரவரி 1893 இல் இந்தியா மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.
1906 இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார்.1906 இல் கல்கத்தா தேசியக் கல்லூரியின் முதல் முதல்வரானார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907 இலும் 1908 இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.
1904 இலேயே பிரணாயாமம் பயிலத் தொடங்கிய போதும் சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. ஸ்வராஜ் (விடுதலை) என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர்.
1909இலே சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.
ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.
அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
. அவர் 1950-ம் ஆண்டு மகா சமாதியடைந்தார்
.மகான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்தில், தம் குறிக்கோளாகக் கொண்டவற்றை எல்லாம் முழுதுமாகப் பெற்றார். அவருக்கு சக்தியாக விளங்கிய அன்னை ஸ்ரீ அரவிந்தருடைய அருளை, தம்மைச் சூழ்ந்திருந்த சாதகர்கட்கும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கும், தம்மை அறிந்திராத ஏனைய உலகத்தாருக்கும் பரிபூரணமாகப் பரிமாறினார். அதாவது ஊற்று நீராக இருந்த ஸ்ரீ அரவிந்தக் கருணையைப் பருகும் நீராக அளித்தவர் அன்னை. ‘அன்னை இல்லாவிட்டால் தம் யோகப் பலன்கள் எல்லாம் தம்முடனேயே இருந்துவிட்டிருக்கும், மற்றவர்கட்குப் பயன்பட்டிராது’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியிருப்பது இதற்குச் சான்று.
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரமம் ஆன்மிக ஆலயமாக திகழ்கிறது. உலகின் மூலை முடுக்கெல்லாமிலிருந்து இருந்து மக்கள் ஆசிரமத்திற்கு வந்து தரிசித்து மன நிம்மதியோடு செல்கிறார்கள்.
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரமம் ஆன்மிக ஆலயமாக திகழ்கிறது. உலகின் மூலை முடுக்கெல்லாமிலிருந்து இருந்து மக்கள் ஆசிரமத்திற்கு வந்து தரிசித்து மன நிம்மதியோடு செல்கிறார்கள். தேடி வந்து நாடி அழைக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அருள் ஒளிகாட்டி சூட்சும ரீதியில் அவர்களைக் காத்து அருள்புரிகின்றனர்.
ஸ்ரீ அரவிந்தரின் பக்தர்கள் கீதையை போல சாவித்ரி காவியத்தைப் படிக்கிறார்கள். எந்தக் கோவிலில் செய்த பிரார்த்தனைகள் பலிக்காதபோதும், இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்கிறார்கள். 'இது கர்மவினை- அனுபவிக்க வேண்டும்', என்று சொல்லிய வினைகள் கூட நம்பிக்கை வைத்து தியானித்து பிரார்த்தனை செய்யும்போது வினைகள் தீரும் அதிசயத்தைக் காண்பதாகவும் அவர்களது பார்வை பட்டாலே நெஞ்சும் ஆன்மாவும் நிறைவதை உணரலாம் என்று பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கோடு கூறுகிறார்கள். அலைபாயும் மனதை அடக்கி ஆளும் புகலிடமாக பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரமம் விளங்குகிறது என்றே சொல்லலாம்
Comments