ஆந்தாலஜி திரைப்படங்கள்
ஆந்தாலஜி திரைப்படங்கள்
!
‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியிலிருந்து....
திரையரங்குகளுக்கெனத் தயாரானத் திரைப்படங்கள் பலவும், கரோனா காரணமாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன. இவைதவிர ஓ.டி.டி. தளங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரான ஆந்தாலஜி திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. தமிழ்ச் சூழலில், பிரபல இயக்குநர்கள், கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி அமேசானில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ போன்ற ஆந்தாலஜி முயற்சிகள், தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுபோல் சினிமா ரசிகர்களைப் பரவலாக ஈர்த்துவருகின்றன.
வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பொதுவான ஒரு கருத்தாக்கம், காலகட்டம் அல்லது இலக்கிய வடிவத்தைக் கொண்ட கதைகளின் தொகுப்பே ஆந்தாலஜி. அதேபோல் வெவ்வேறு இயக்குநர்களின் குறும்படங்கள், ஒரு தொகுப்பாக முழுநீளத் திரைப்படத்தின் கால அளவில் வெளியாவதையும் ஆந்தாலஜி திரைப்படம் என்கிறார்கள். வெவ்வேறு கதைகளைக்கொண்டு ஒரே இயக்குநர் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படங்களும் உண்டு. இவ்வகை ஆந்தாலஜி கதைகள், குறும்படங்களுக்கு பொதுவான இழையாக ஒரு களமோ, கருபொருளோ, குறிப்பிட்டக் காலகட்டமோ இணைப்புப் பாலம்போல் அமைந்திருக்கும்.
தொடக்கமும் பரவலும்
சலனப் பட காலம் தொடங்கி, 1940-களின் ஹாலிவுட், ஐரோப்பிய திரைப்படங்கள் பலவற்றிலும் ஆந்தாலஜியின் தாக்கம் உண்டு. ஒவ்வொரு பத்தாண்டிலும் ஆந்தாலஜி, அதன் தாக்கத்திலான திரைப்படங்கள் எனத் தனிப் பட்டியல்கள் நீள்கின்றன. வூடி ஆலன் உள்ளிட்ட பல ஹாலிவுட் மேதைகளின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான ‘நியூயார்க் ஸ்டோரிஸ்’ (1989), ரோல் தால் எழுதிய குறுங்கதைகளை குவெண்டின் டாரண்டினோ உள்ளிட்டோர் இயக்கிய ‘ஃபோர் ரூம்ஸ்’ (1995) போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் அசலான ஆந்தாலஜி அனுபவத்தைத் தருபவை. ஆங்கிலம், மண்டாரின் (சீன), இத்தாலி என தலா 3 மொழிகள்/கதைகள்/இயக்குநர்கள் தமது பிரத்யேக கலைப் பாணியில் பாலியலைக் கொண்டாடிய ‘ஈரோஸ்’ (2004) திரைப்படம், ஈரானிய ஆந்தாலஜியான ‘ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப்’ (2010)
போன்றவை சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற ஆந்தாலஜி திரைப்படங்கள்.
தமிழில் நிகழ்ந்த தொடக்கம்
1939-ல் ஸ்ரீரஞ்சனி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக எஸ்.எஸ்.வாசன் தயாரித்த திரைப்படம் ‘சிரிக்காதே’. ‘அடங்காப் பிடாரி’, ‘மாலைக் கண்ணன்’, ‘யம வாதனை’, ‘புலி வேட்டை’, ‘போலிச் சாமியார்’ என 6 குறும்படங்களின் தொகுப்பாக வெளியான இந்தத் தமிழ் திரைப்படமே, இந்தியாவின் முதல் ஆந்தாலஜி திரைப்படமாக பரவலாக அடையாளம் காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ‘மணிமாலை’ (1941) என்ற திரைப்படம் 4 நகைச்சுவைக் குறும்படங்கள், 4 இயக்குநர்கள், தனி நடிகர் பட்டாளம் என ஆந்தாலஜிக்கான அனைத்து இலக்கணங்களுடனும் வெளியானது. கே.பாலசந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ (1990), 2 கதைகளை வைத்துப் பின்னப்பட்ட ஒரு ஆந்தாலஜி திரைப்படமே.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ‘பெஞ்ச் டாக்கீஸ்’ (2015), ‘அவியல்’ (2016), ‘6 அத்தியாயம்’(2018) போன்றவை அண்மைக் காலத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படங்கள். இயக்குநர் வசந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ (2018) பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பரவலான பாராட்டுகளைப் பெற்றது. ஹலிதா ஷமீம் இயக்கி கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான வெற்றிபெற்ற ‘சில்லுக்கருப்பட்டி’, அமேசான் பிரைமில் அண்மையில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’, நெட்பிளிக்ஸில் டிசம்பர் 18 அன்று வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ எனத் தமிழின் ஆந்தாலஜி போக்கு, புது வேகமெடுத்திருக்கிறது.
முன்னிற்கும் மலையாளமும் இந்தியும்
ஆனால், ஆந்தாலஜி வகை சினிமாவில் மலையாளப் படவுலகம் சற்று பின்னதாகப் பந்தயத்தில் இறங்கினாலும் ரசனைபாவிய படங்களை ரசிகர்களுக்குத் தருவதில் முன்னிற்கிறது. டி.எஸ்.முத்தையா தயாரித்து இயக்கிய ‘சித்ரமேளா’ (1967), மலையாளத்தின் முதல் ஆந்தாலஜியாக பாவிக்கப்படுகிறது. ‘கேரளா கஃபே’ (2009) ஆந்தாலஜிக்கான முத்திரைத் திரைப்படமாக வெளியானதுடன் மிகப்பெரிய வணிக வெற்றியையும் அள்ளியது. தமிழ், மலையாளத்தில் வெளியான ‘சோலோ’ (2017) மலையாள சினிமாவில் ஆந்தாலஜியின் எல்லைகளை விஸ்தரிக்க முயன்றது. மேலும் ‘5 சுந்தரிகள்’ (2013), ‘டி கம்பெனி (2013), ‘கிராஸ் ரோட்’ (2017), ‘ஒண்ணும் ஒண்ணும் மூணு’ (2015) போன்ற மலையாளப் படங்களும் ஆந்தாலஜி பணியில் அட்டகாசமாக அணிசேர்ந்தன.
இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியில் வெளியான ‘பாம்பே டாக்கீஸ்’ (2013) வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குநர்களான கரன் ஜோஹர், திவாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் கூட்டணி இயக்கிய ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ (2018), ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ (2020) என நெட்பிளிக்ஸில் தங்களது ஆந்தாலஜி முயற்சிகளைத் தொடர்ந்தனர். 10 குறும்படங்களின் தொகுப்பான ‘தஸ் கஹானியான்’ (2007), 12 இயக்குநர்கள் இணைந்த ‘த லாஸ்ட் ஆக்ட்’ (2012), 5 குறும்படங்களின் தொகுப்பான ‘ஷார்ட்ஸ்’ (2013), 11 இயக்குநர்களுடனான ‘மும்பை கட்டிங்’ (2008) போன்றவை பாலிவுட் ஆந்தாலஜிகளில் முக்கியமானவை.
தாகூரின் 3 சிறுகதைகளை வைத்து திரைப்பட மேதை சத்யஜித் ராய், ‘தீன் கன்யா’ (1961) என்னும் ஆந்தாலஜி திரைப்படத்தைப் படைத்தார். மற்றொரு வங்காள திரைப்படமான ‘வசந்த உற்சவ்’ (2013), தெலுங்கில் ‘C/o கஞ்சரபலேம்’ (2018), ‘சந்தமாமா காதலு’ (2014), மலையாளத்தில் ‘சேப்டர்ஸ்’ (2012), ‘கதவீடு’ (2013), கன்னடத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ (2017), ‘கத சங்கமா’ (2019) என பல இந்திய மொழிகளில் உருவான ஆந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
கலை - வெகுஜன இணைப்பு
கலைப்படங்கள், சுயாதீனத் திரைப்படங்கள் மட்டுமே வெகுஜன சினிமாவிலிருந்து வித்தியாசப்படும் புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கிவந்தன. தற்போது அந்த இடத்துக்கு ஆந்தாலஜி படைப்புகளும் முன்னேறிவருகின்றன. கலைப்படங்களின் நல்ல இயல்புகளை வரித்துக்கொள்வதுடன், வெகுஜன சினிமாவின் கவர்ச்சியான அம்சங்களையும் கைவிடாமல் அசலான ஆந்தாலஜி படைப்புகள் தங்களுக்கான இடத்தைத் தக்கவைக்கின்றன. இதன்மூலம் பரவலான ரசிகப் பரப்பையும் ஆந்தாலஜி திரைப்படங்கள் வசீகரிக்கின்றன.
ரசிக விருந்தும் படைப்பாளி சுதந்திரமும்
படைப்பாளிகளும் ஆந்தாலஜியில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரே திரைப்படத்துக்கான நேரத்தில் வெவ்வேறு கதைகள், நடிகர்கள், இயக்குநர்கள் என ஆந்தாலஜி படைப்புகள், ரசிகனுக்கு பல சுவைகளை உள்ளடக்கிய பஃபே விருந்து சாப்பிட்ட உணர்வைத் தருகின்றன. வழக்கமான வெகுஜன திரைப்படத்தின் வணிக வெற்றிக்காக சமரசம்செ ய்துகொள்ளும் படைப்பாளிக்கு, ஆந்தாலஜி குறும்படங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரத்தையும் சவாலையும் ஒருங்கே வழங்குகின்றன.
அதிகபட்சம் அரை மணி அவகாசத்தில் சொல்லவந்ததை நீட்டிமுழக்காமல், நறுக்கென்று ரசிக நெஞ்சங்களில் புதிய திரை அனுபவத்தைத் தந்துவிட வாய்ப்பாக அமைகின்றன. இதுபோன்ற உள்ளார்ந்த பயன்களும் சுதந்திரங்கள் நிறைந்த ஓ.டி.டி. தளங்களின் பெருக்கமும் பல பெரும் திரைப் படைப்பாளிகளையும் நட்சத்திரங்களையும் ஆந்தாலஜிகளின்பால் ஈர்த்துள்ளன. சுருங்கச் சொல்லி ரசிகர்களை நெருங்கி வரச் செய்திருக்கிறது வேகமாய் வளர்ந்துவரும் ஆந்தாலஜி வடிவம்.
நன்றி: இந்து தமிழ் திசை
Comments