மின்னணு கழிவுகளை திறம்பட கையாள்வதற்கான வழி
மத்திய தொலைதொடர்புத்துறை மற்றும் மொபைல் சேவை சங்கம் இணைந்து நடத்தும் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த மாநாடு டெல்லியில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, டிஜிட்டல் மயமாக்கல், தொழில்முனைவு மற்றும் புதுமை ஆகிய கொள்கைகளை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த 150 நிறுவனங்களும், 210 பேச்சாளர்களும், 3000 பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்த மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மின்னணு கழிவுகளை திறம்பட கையாள்வதற்கான வழிகளை சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, கைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே மின்னணு கழிவுகளை திறம்பட கையாளுவதற்கும், மறுசுழற்சி மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியை சிந்திப்பதற்கான பணிக்குழுவை உருவாக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இந்தியர்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Comments