ஆர். வெங்கட்ராமன் பிறந்த தினம்
ஆர். வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று டிசம்பர் 4
1965இல் வந்த கட்டுரை இது. அப்போது ஆர்வி தமிழ் நாட்டின் தொழில் அமைச்சர். நன்றி, விகடன்!
உன்னத லட்சியம்… உள்ளத் தூய்மை..!
பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு தொழில் வளத்தில் பெருமைப்படக்கூடிய நிலையில் இருக்கவில்லை. ‘வடக்கு வளருகிறது, தெற்கு தேய்கிறது’ என்ற குற்றச்சாட்டு வலுத்திருந்த காலம் அது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் தொழில் துறையில் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை ஒருவரும் மறுக்க முடியாது.
முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறு தொழில்களே இருந்த நம் மாநிலத்தில் இன்று ஏழாயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் காட்சியளிக்கின்றன. நெய்வேலி நிலக்கரித் திட்டம் நாட்டிற்கே ஓர் அணிகலனாகத் திகழ்கிறது. மின்சார உற்பத்தி பன்மடங்காகப் பெருகி, பல தொழில்களுக்கு உயிர்நாடியாக ஒளி தருகிறது. இருபத்து நான்கு தொழிற்பேட்டைகள் இணையற்ற வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கல்பாக்கம் அணு மின்சார நிலையம் தென்னகத்திற்கே பெருமை தேடித் தரப் போகிறது.
இவ்வாறு எண்ணற்ற தொழிற் சாலைகள் ஏற்படவும், பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், தொழிற்கல்வி முன்னேறவும், சிறு தொழில்களும் பெருதொழில்களும் ஒருங்கே வளரவும் காரணமாயுள்ள தமிழக சர்க்காரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இத்துறையில் தொழிலமைச்சர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அரும் பணியாற்றி, அரிய சாதனைகள் புரிந்துள்ளார்.
தொழில் அமைச்சராவதற்கு முன் தொழிலாளர் தலைவராக இருந்து ‘ஆர்.வி.’ என்ற அன்புப் பெயரைப் பெற்றிருப்பவர் திரு.வெங்கட்ராமன். தொழிற்சங்கத்தில் தொண்டாற்றியபோது, தொழிலில் உள்ள இடையூறுகளையும், தொழில் அதிபர்களின் பிரச்னைகளையும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், நாட்டில் தொழில் வளருவதற்கு எத்தகைய சூழ்நிலை தேவை என்று அறியும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருந்தது. ஆகவே, தமது பதவிக் காலத்தில் தமிழகத்தையே தொழில்மயமாக்கி சீரும் சிறப்பும் மிகுந்ததாகச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, கருமமே கண்ணாய் இருந்து வருகிறார். புதுப்புதுத் தொழில்கள் தோன்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவற்றைத் தொடங்குவதற்கான நபர்களைக் கண்டுபிடித்து, தேவையான நிதி வசதி செய்து கொடுத்து, தடைகளை அகற்றி, அகலும்பகலும் அயராது உழைத்து வருகிறார்.
வெளிநாடுகளுக்குப் போகும் போதெல்லாம்கூட அவர், அந்த நாடுகள் எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த வகைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவக் கூடும் என்று ஆராய்ந்து வரத் தவறுவதில்லை. அது மட்டுமல்ல, அரும்பாடுபட்டு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவும் வழி செய்து வருகிறார்.
திரு.வெங்கட்ராமனின் கருத்துக்களில் புதுமை இருக்கும்; பேச்சில் தெளிவு இருக்கும்; பிரச்னைகளை ஆராய்வதில் மதி நுட்பம் இருக்கும்; செயலாற்றுவதில் ஊக்கமும் உறுதியும் இருக்கும்.
பொதுத் துறை என்றும், தனியார் துறை என்றும் வேற்றுமை பாராட்டிக் கொண்டிராமல், உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்பதைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் வெங்கட்ராமன். முதலீடு செய்பவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் குறைத்து தொழில் வளருவதற்குத் தடையாக இருக்கும் விதிமுறைகளைக் கண்டிக்கவும் அவர் தயங்குவதில்லை. அந்நியச் செலாவணி தேவையற்ற சிறு தொழில்கள் துவங்குவதற்கு தாராளமாக லைசென்சுகள் வழங்கப்படவேண்டும் என்றும், தொழிலதிபர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார்.
‘உற்பத்தியைப் பெருக்கி அதனால் கிடைக்கும் செல்வத்தைச் சீராகப் பங்கிடுவதுதான் உண்மையான சோஷலிசம்’ என்பதில் அசையாத நம்பிக்கை உடையவர் திரு.வெங்கட்ராமன். இவரைப் போல் உன்னத லட்சியத்துடனும் உள்ளத் தூய்மையுடனும் பணிபுரி யும் அமைச்சர்கள் இருந்துவிட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிக் கவலையே படவேண்டாம்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments