துன்பங்களை எதிர்கொண்ட "ஆட்ட நாயகன்
நடராஜனின் குடும்பம் அனுபவித்த வறுமையின் கொடுமை -
துன்பங்களை எதிர்கொண்ட "ஆட்ட நாயகன்"
இந்திய அணிக்காக தனது முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெள்ளிக்கிழமை வீழ்த்தி அசத்தியிருக்கிறார், சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் இவர் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக களம் இறங்கி விளையாடினார்.
கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்து வரும் அதே சமயம், சத்தமே இல்லாமல் அமைதியாக சின்னப்பம்பட்டியில் மகனின் விளையாட்டுத்திறனை அவரது குடும்பத்தினர் ரசித்து வருகிறார்கள்.
சாலை ஓரத்தில் பத்துக்கு பத்து சிமெண்ட் அட்டை வீடு, வீட்டுக்கு முன்பு சின்ன கடை என வறிய நிலையின் அத்தனை அடையாளங்களும் நிறைந்துள்ளன பந்து வீச்சாளர் நடராஜனின் வீடு. தன் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி விளையாடி வரும் வேளையிலும், அப்பா கூலி நெசவாளியாகவும், அம்மா கறிக் கடையில் சில்லி போட்டு விற்பனை செய்பவராகவும் எந்த அடையாளமும் மாறாமல் அப்படியே உள்ளனர். இவரது தாய் சாந்தாவை பிபிசி தமிழுக்காக சந்தித்துப் பேசினோம்.
"எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த பையன்தான் நடராஜன். நடராஜனின் இளமைக்காலம் மிகவும் கஷ்டமான காலமாகவே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் தறி ஓட்டிதான் பிழைப்பை ஓட்டினோம். பின்பு வீட்டுக்கு ஒட்டியதுபோலவே இந்த கடையை ஆரம்பித்தேன். பதினைந்து வருஷமாய் நல்ல சோறு சாப்பிடாமல் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறியுள்ளான். ரேசன் அரிசி சாப்பாடும், ரேசன் எண்ணெய்யும் எங்களது குடும்பத்து உணவு ஆதாரங்களாக இருந்துள்ளன.
எங்களது குடும்பப் பொருளாதாரத்தை கொண்டு நடராஜனை பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படிக்க வைக்க முடிந்தது. அதன் பின்பு, அவனுடைய நண்பர் ஜெயப்பிரகாஷ் தான் எல்லா வகையிலும் வழிகாட்டினார். நடராஜன் கல்லூரியில் சேர்ந்தபோது பஸ்ஸுக்கு ஐந்து ரூபாய் காசு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம்" என்று கண்ணீர் மல்க சாந்தா கூறினார்.
நடராஜனின் விளையாட்டு ஆர்வத்தை நினைவுகூர்ந்த அவர், ''ஒருமுறை நடராஜனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், கிரிக்கெட் விளையாடுவதை விட்டதில்லை. தினமும் கிரிக்கெட் விளையாடச் சென்றால் மாலையில் ஏழு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருவான். சோறு கூட சாப்பிட மாட்டான். அவன் ஆர்வமாக இருந்ததால் விளையாடட்டும் என்று விட்டுவிட்டோம். நாங்கள் கஷ்டப்பட்டபோது கூட அவனை வேலைக்கு போ என்று சொல்லாமல் விளையாட அனுமதித்தது இப்போது சந்தோஷமாக இருக்கிறது.
இதுவரை எங்களை மதிக்காத ஊர் மக்கள் கூட, இப்போது அவர்களாகவே வந்து பேசுகிறார்கள். நடராஜன் இன்னும் நல்ல விளையாட வேண்டும் என்று பாராட்டுகிறார்கள். உங்கள் பையன்தானா என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். இதனால் சந்தோஷமாக இருக்கிறது.
நடராஜன் இடது கையால் பந்து வீசுவதால் லெஃப்ட் என்றும், போல்ட் என்றும் பிள்ளைகள் கூப்பிடுவார்கள். நாங்கள் செல்லமாக "மணி" என்று அழைப்போம்.
ஆஸ்திரேலியா தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊர்மக்கள் ஏன் விளையாடவில்லை என்று கேட்டார்கள். மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் விக்கெட் எடுத்தவுடன் நிறைய சந்தோஷமாக இருந்தது. ஊர் மக்களும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் சாப்பாட்டுக்குச் சிரமப்பட்டோம். இப்போது சாப்பிட நேரமில்லாமல் இருக்கிறது" என்று சொல்லிச் சிரிக்கிறார் சாந்தா.
நடராஜன், சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளி அவரது வீட்டுக்கு நேர் எதிரில் உள்ளது. பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் விளையாடி உள்ளார். இவரது பள்ளியின் தலைமையாசிரியர் ஆறுமுகம், "நடராஜன், 'யார்க்கர்' நடராஜன் ஆக உயர்ந்திருப்பதற்குக் காரணம் விடாமுயற்சி தான். அவரது நண்பர் ஜெயப்பிரகாஷ் பெரிய அளவில் உதவியுள்ளார். கிராமப்புற மாணவர், மாவட்ட அளவில், மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வதே பெரிய விஷயம்தான். நடராஜன், டி.என்.பி.எல், ஐ.பி.எல், இந்திய அணி என படிப்படியாக உயர்ந்துள்ளார். இன்னமும் பல உயரங்களைத் தொட வேண்டும். அதிகளவில் விக்கெட் பெற்று சின்னப்பம்பட்டி கிராமத்துக்கும், எங்களது பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார்" என்றார்.
நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜன்: விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
சின்னப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலு, "நான் அரசு பள்ளிக்கு எதிரில் பேன்ஸி கடை வைத்துள்ளேன். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தாலேயே கிரிக்கெட் விளையாடுவது தெரியும். நடராஜன் ஆரம்பத்தில் டென்னிஸ் பந்தில்தான் விளையாடுவார். வெளியிடங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். போகும்போது அமைதியாகச் சென்றாலும், திரும்பி வரும்போது வெற்றியோடு வருவார். அவர் விளையாடுவதை நாங்கள் ஆர்வத்தோடு உட்கார்ந்து பார்ப்போம். ஆரம்பத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டியில் கலந்து கொண்டார்.
பின்பு, டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் அணிக்குத் தேர்வானார். பின்பு, ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு தேர்வானார். தற்போது சன் ரைசஸ் ஹைதராபாத் டீமில் உள்ளார். தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார்.
நடராஜனின் குடும்பம், வறுமையான நிலையில் பத்துக்கு பத்து என்ற அளவில் உள்ள வீட்டில் தான் இருந்தனர். நடராஜனுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். தங்கையின் படிப்புக்கு உதவி வருகிறார். தற்போது, நடராஜன் குடும்பம் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளது. 'யார்க்கர்' நடராஜனாக உருவெடுத்த பின்பு சின்னப்பம்பட்டியே பெருமை கொள்கிறது" என்றார்.
வறுமையை வென்று இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பதற்கு உதாரண நாயகனாகத் திகழ்கிறார் நடராஜன்.
நன்றி: பிபிசி தமிழ்
Comments