புரெவி புயல் தற்போதைய நிலவரம்
புரெவி புயல் தற்போதைய நிலவரம்
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது புரெவி புயல் குறித்த விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று பாம்பனுக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தரைக்காற்று 45-55 கி,மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென் கிழக்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments