தாயும் நானே, தந்தையும் நானே

 தாயும் நானே, தந்தையும் நானே

குழந்தை வளர்ப்பு தொகுப்பு Kayal Arivalan

அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் வலுவான பிணைப்பு உண்டு. அம்மாவை இழந்த பின்பு இந்த பிணைப்பு இன்னும் ஈர்ப்புமிக்கதாகிறது. தனியாக வாழும் தந்தையின் சவால்கள், சாதனைகள் குறித்து நீத்தி ஜெய்சந்தர் புரிய வைக்கிறார்
கடந்த நவம்பர் மாதம், தனியாக வசிக்கும் தந்தை தனது மனதைத் திறந்து எழுதிய பதிவு ஃபேஸ்புக்கில் வைரலானது. ரிச்சர்டு ஜான்சனின் மகள் பெர்சேபோன் பிறந்த ஒரு மாதத்தில், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்துச் சென்றார்.
“பொதுவாகவே அப்பாவாக இருப்பது குறித்து எனக்கு பதற்றமும், அச்சமும் இருந்தது. இப்போது நான் இரண்டு பொறுப்புகளை ஏற்கும் சூழல். என்னால் இது முடியும் எனத் தோன்றவில்லை. குழந்தை வளர்ப்பு பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துவிட்டேன். தலை பின்னி விடுவது எப்படி? நெயில் பாலிஷ் செய்வது எப்படி? குழந்தை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? அவற்றுடன் தொடர்புள்ள பல வீடியோக்களை யூடியூப்பில் 1,000 மணிநேரங்களுக்கு மேல் பார்த்திருப்பேன்” என தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
“இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒன்றாக வளர்கிறோம். மகளுக்கு 10 மாதம் ஆகிறது. என் நண்பர்கள் பலரும் என்னிடம் குழந்தை வளர்ப்பு பற்றி ஆலோசனை கேட்கின்றனர்” என்கிறார் அவர். குழந்தையின் தாய் பிரிந்த காலம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அந்த நாட்கள் கடும் சோதனையாக இருந்தன. பல நாட்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என நினைப்பேன். சில நாட்கள் தூங்கி கொண்டிருக்கும் செல்ல மகளை கையில் வைத்துக்கொண்டு அழுதிருக்கிறேன். ஏனெனில், அவளுக்கு நல்ல அப்பாவாக இருக்க முடியுமா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” .
ஜான்சனின் குழப்பம் பொதுவானது. பொதுவாக அம்மாக்கள் உயிரியல் அல்லது சமூக ரீதியாக குழந்தை வளர்ப்பிற்கு ஏற்றவர்களாக இருக்கும் போது, மகளுடன் ஒற்றை அப்பாவாக இருப்பது கொஞ்சம் கடினமானதுதான். சாஃப்ட்வேர் எஞ்சினியரான ரவி.கே.சிங்கின் கதையும் அதுதான். 12 ஆண்டுகளுக்கு முன் மகள் காவ்யா ஆறு வயதாக இருந்த போது அவரின் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார். “அதற்கு முன்பும் சரி பின்னரும் சரி அது போன்ற உதவியற்ற தன்மையை நான் உணர்ந்ததில்லை. மனைவியின் இழப்பு என்னை பாதித்தது. அதோடு என் குழந்தையின் சார்பாகவும் சோகத்தை உணர்ந்தேன். இந்த வயதில் அம்மாவை இழப்பது எத்தனை வேதனையானது? இதை நான் எப்படி சமாளிக்கப் போகி றேன் என அஞ்சினேன்?” என்கிறார் ரவி.
ரவியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுமாறு பலரும் வற்பறுத்தினர். “அந்த யோசனையை உடனடியாக நிராகரித்தேன். அது அந்தப் பெண்ணுக்கும் காவ்யாவுக்கும் நியாயமாக இருக்காது. அதனால், என் அம்மாவை என்னுடன் வந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். என்னுடைய ஓய்வு நேரம் முழுவதையும் காவ்யாவுடன் செலவிட்டு, அவளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவளுக்கு வீட்டுப்பாடம், விளையாட்டுகளில் உதவுதல் என ஒரே நேரத்தில் அவளுக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் மாறினேன். அவளுக்கு 14 வயதான போது தான் நான் கொஞ்சம் நிதானமாகி, அவளுக்கான இடத்தை அளித்து நானும் எனக்கான பணிகளை செய்யத்துவங்கினேன் ” என்கிறார்.
‘‘இந்த ஆண்டு எனக்கு 18 வயதாகிறது, நான் வளர்ந்திருக்கும் விதத்திற்கு என் அப்பாவே காரணம். முதல் மாதவிலக்கின் போது கைப்பிடித்து அழைத்துச்சென்றது முதல் காதலன் பற்றி வெளிப்படையாக பேச வைத்தது என பலவற்றை செய்திருக்கிறார். அம்மாவின் இழப்பை உணர்ந்தேன். இன்று அப்பாவுடன் நெருக்கமாக உணர்கிறேன். நாங்கள் பிணைப்பாக இருக்கிறோம். இந்தப் பந்தத்தை யாரும் பிரிக்க முடியாது” என்கிறார் தற்போது கல்லூரியில் படிக்கும் காவ்யா.
“குழந்தைகளின் நலனை அம்மாவின் இருப்பே நன்றாக கவனித்துக்கொள்கிறது என சொல்லப்படுவதில் உண்மையில்லை” என்று 2002ல் கூறினார் மனைவியுடன் விவாகரத்து ஆன பிறகு தனது குழந்தையை வளர்த்த பாடகர் பாப் ஜிடோப். “பெண்களைப் போலவே ஆண்களும் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றனர். வெளிப்படுத்தும் விதம் மாறலாம். எல்லா பெண்களும் தேவதைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி