மருதகாசி நினைவு நாள்
மருதகாசி நினைவு நாள் இன்று நவம்பர் 29
‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி’ (கைதி கண்ணாயிரம்) மதியை அல்ல, மனங்களை மயக்கிய கவிஞர் அவர். ‘கண்களால் காதல் காவியம்’ (சாரங்கதாரா) தீட்டிய அவரது பட்டியலைக் காண, ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’ (பாவை விளக்கு) என்றால், ‘நீயே கதி ஈஸ்வரி’ (அன்னையின் ஆணை)! யார் இந்த அற்புதப் படைப்பாளி?
வானொலிப் பெட்டி அருகிலேயே காதுகள் வைத்துக் கிடந்த காலம் ஒன்று இருக்கவே செய்தது. அல்லது, பாக்கெட் டிரான்சிஸ்டரைக் காதலித்தபடி வெட்ட வெளியில், மொட்டை மாடியில் வான் நட்சத்திரங்களோடு பேசிக் களித்த காலம். இரவையே மயக்கும் இசையை, அந்த இசை உடுத்திக்கொள்ளும் பாடல் வரிகளை மானசீகமாக யார் கொண்டாடினாலும், பாடலாசிரியர்கள் வரிசையில் யாரும் மறக்க முடியாத பெயராக மருதகாசி இருக்கும்.
ஜி ராமநாதன், கே வி மகாதேவன், தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில் மொத்தம் நாலாயிரத்துக்கும் மேலான பாடல்கள்! ‘உலவும் தென்றல் காற்றினிலே’ (மந்திரி குமாரி) அவரது பாடல்கள் ‘வசந்த முல்லை போலே வந்து’ (சாரங்கதாரா) ஆடிக்கொண்டிருக்கும்.
அவரது ‘சீருலாவும் இன்ப நாதம்’ (வடிவுக்கு வளைகாப்பு) கேட்க ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’க் (படிக்காத மேதை) காத்திருந்த காலம் அது. ‘மாயாவதி’ என்ற படத்துக்கு, ‘பெண் எனும் மாயப் பேயாம் ...’ என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடல். ஒவ்வொரு பொங்கல் நாளிலும் ஒலிபரப்பாகும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ பாடல் அவருடையதுதான்.
ஐம்பது, அறுபதுகளில் திரைப்படத்தின் காட்சியை ஊடுருவிச் சென்று பார்க்கும் விழியும், அதைப் பாட்டாக்கி வழங்கும் மொழியும் வாய்த்திருந்த அற்புதக் கவிஞர் மருதகாசி. பாபநாசம் சிவனுடைய சகோதரர் ராஜகோபாலனிடம் இலக்கிய இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர். ஏற்றத் தாழ்வு பாராத காதல் கொஞ்சும் ‘வண்டி உருண்டோட அச்சாணி’ (வண்ணக்கிளி) பாடல் வரிகள் இலக்கிய ருசி மிகுந்தவை.
புரிதலின் இமயம்
‘மந்திரி குமாரி’ திரைப்படத்தில், ஆசை மொழி பேசி மனைவியை மலையுச்சியில் இருந்து தள்ளிக் கொல்லும் நோக்கத்தோடு கணவன் அழைத்துச் செல்லும் காட்சிக்காக, திருச்சி லோகநாதன் - ஜிக்கி இணை குரல்களின் கிறக்கம் மிகுந்த ‘வாராய் நீ வாராய்’ பாடல். ஓர் தலைசிறந்த பாடலாசிரியருக்கு இருக்க வேண்டிய புலமைக்கும், நுட்பமான புரிதலுக்கும் ஆகச் சிறந்த சான்று. ‘முடிவிலா மோன நிலையை நீ மலை முடியில் காணுவாய் வாராய்’ என்பது அந்தப் பாடலின் உச்சம்.
பாடல் முடிவில், அவனது சாகச முடிவை அறியும் அந்தப் பெண் தான் முந்திக்கொண்டு அவனைத் தள்ளிக் கொன்றுவிடுவாள். அந்தக் காட்சிக்கு முந்தைய பாடல் வரி இது என்பதால் ‘இது பொருந்தாது’ என்று தன்னிடம் வாதிட்ட படக்குழுவைத் தமது திடமான முடிவால் புறந்தள்ளினார் இயக்குநர் அப்படத்தின் இயக்குநர் கணித்தபடியே அந்தப் பாடல் காட்சி மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.
‘லவ குசா’ தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது முப்பத்தைந்துக்கும் அதிகமான பாடல்கள் அவர் எழுதியவை! புகழ்பெற்ற ‘ஜெகம் புகழும் புண்ய கதை’ எத்தனை அற்புதமான சுவைக் கலவை! சம்பூர்ண ராமாயணம் மட்டுமென்ன, ‘வீணைக் கொடி உடைய வேந்தனே’ உள்ளிட்டு எத்தனை எத்தனை முத்துக்கள்!
மறக்க முடியாத வரிகள்
‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் அத்தனை பாடல்களுமே அவர் எழுதியவை. பி.பானுமதியின் ‘அழகான பொண்ணு நான்’, ஏ. எம். ராஜாவோடு இணைந்து பாடிய ‘மாசிலா உண்மைக் காதலே’ என்று எதை விட, எதைச் சொல்ல! ‘கைதி கண்ணாயிரம்’, ‘வண்ணக்கிளி’, ‘மனமுள்ள மறு தாரம்’, ‘பாவை விளக்கு’ போன்ற பல படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் அவர்.
தனித்துவக் குரலில் ‘சங்கீத சௌபாக்கியமே’ என்று அசத்திய சி.எஸ்.ஜெயராமனின் ‘இன்று போய் நாளை வாராய்’ (சம்பூர்ண ராமாயணம்), ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி’ (பாவை விளக்கு), சீர்காழி கோவிந்தராஜனின் ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’ (குமுதம்), ‘ஆத்திலே தண்ணி வர’, ‘காட்டு மல்லி பூத்திருக்க’ (வண்ணக்கிளி) எல்லாமே மருதகாசியின் உருவாக்கம். ‘பார்த்தாலும் பார்த்தேன்’ (ஆயிரம் ரூபாய்) உள்பட பி.பி.னிவாஸின் அருமையான பாடல்கள் பல மருதகாசி எழுதியவை.
‘உத்தம புத்திரன்’ படத்தின் ‘முல்லை மலர் மேலே’ பாடலைப் போலே இன்னொன்று உண்டா? டி.எம்.சௌந்திரராஜன் - பி.சுசீலா இணை குரல்களின் அசாத்திய ஒத்திசைவுச் சிற்பமான அந்தப் பாடல், காதல் குழைவின் உவமைச் சங்கிலித் தொடர்.
‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’, ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே’, ‘மணப்பாறை மாடுகட்டி’ போன்ற டி.எம்.எஸ்ஸின் முத்திரைப் பாடல்கள் பலவும் அவர் எழுதியவைதாம். பி.சசீலாவின் ‘எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?’, ‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ என்று விரியும் மறக்க முடியாத வரிகள் எல்லாம் அவருடையது தாம். ‘மாமா மாமா மாமா’ உள்ளிட்டு ஜமுனா ராணி பெயர் சொல்லும் பாடல்கள். டி.ஆர். மகாலிங்கத்துக்காக ஆட வந்த தெய்வத்தின் ‘கோடி இன்பம்’, ‘சொட்டுச் சொட்டு’ !
என்.எஸ்.கிருஷ்ணனுக்காக ‘சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு’ (ராஜ ராணி) எனும் அற்புதப் பாடலை எழுதி, ‘உடுமலை கவி ஆக்கிரமித்துக்கொண்ட என் இதயத்தில் பாதியை உனக்குத் தருகிறேன்’ என்று சொல்ல வைத்தவர் மருதகாசி.
எளிமையின் அழகு
‘நீல வண்ணக் கண்ணா வாடா’ (பால சரஸ்வதி - மங்கையர் திலகம்), ‘நீ சிரித்தால்’ (சூலமங்கலம் ராஜலட்சுமி - பாவை விளக்கு) உள்பட தாலாட்டில் நெகிழ வைக்கும் பாடல்கள். ‘சமரசம் உலவும் இடமே’ (ரம்பையின் காதல்) எனும் தத்துவத் தேடலின் அற்புத வரிகள். ‘யார் பையன்’ படத்தில் முடிவை மாற்றத் தூண்டும் மனச்சாட்சியின் குரலாக கண்டசாலா பாடும் ‘சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா’ பாடல் அசாத்திய எளிமையின் உச்ச அழகு.
எம்.ஜி.ஆர். படங்களுக்கான தேர்ச்சியான வரிகளால், அவர் இதயத்தில் இடம்பிடித்திருந்தார் ‘திரைக்கவி திலகம்’ மருதகாசி. ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா’ (தாய்க்குப் பின் தாரம்) முக்கியமானது. ‘மன்னாதி மன்னன்’ படத்தின் ‘ஆடாத மனமும் உண்டோ’ எத்தனை அற்புதமான ஒன்று! ‘சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ’ என்ற அந்தப் பல்லவி (சபாஷ் மாப்பிள்ளை) இன்றும் பொருந்தக்கூடியது! ஓர் இடைவெளிக்குப் பிறகு ‘மறுபிறவி’ எடுத்து வந்தபோது, ‘கடவுள் என்னும் முதலாளி’, ‘இப்படித்தான் இருக்க வேணும்’ போன்ற பாடல்களை ‘விவசாயி’ படத்துக்காக எழுதினார்.
புதிய பாடலாசிரியர்களை ஊக்குவித்த பெருந்தன்மையாளர் மருதகாசியை ‘நினைந்து நினைந்து நெஞ்சம்' (சதாரம்) உருகத்தானே செய்யும்! எல்லாம் 'அன்பினாலே உண்டாகும் இன்பநிலை' (பாச வலை) ! வாணி ஜெயராமுக்கும் வாய்த்த ‘ஆல மரத்துக் கிளி' (பாலபிஷேகம்) என்று போகும் பட்டியலில் 'முதல் என்பது தொடக்கம், முடிவென்பது அடக்கம்' (பூவும் பொட்டும்) என்று தத்துவங்களை எளிய மொழியில் காற்றில் கலந்துவிட்ட ஆற்றல் மிக்க கவிஞர்.
தாள லயத்தின் சுகமும், சந்தமும் கொஞ்சும் அவருடைய பாடல்களால் இன்னும் பல நூற்றாண்டுகளின் இரவுகள் சுமந்து சென்றுகொண்டிருக்கும் அவர் நினைவுகளை!
நன்றி: இந்து தமிழ் திசை
Comments