கரை மேல் பிறக்க வைத்தான்

 மீனவப் பெருங்குடி மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி, தங்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசுபடுவதால், மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று, உலக அளவில் உரிமைக்குரல் கொடுத்துப் போராடித் தீர்வு கிடைத்த நாள் நவம்பர் 21, இந்த நாளைத் தான் உலக மீனவர்கள் தினமாக கொண்டடி வருகிறோம். 


இந்தியக் கண்டம், 6086 கிலோ மீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில், தமிழகம் மட்டும் 1000 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த வளங்களும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரமே நெய்தல் நில நாகரிகம் ஆனது. 

கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்கக் கொந்தளிக்கும் கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்திப் போராடுவதே கடலோடிகளின் அன்றாட வாழ்க்கை. 

கடலுக்குள் சென்றால், திரும்பி வர உயிருக்கும் என்பது உறுதி இல்லை. விவசாயிகளைப் போலவே, மீனவர்களும் வாழ்நாள் முழுமையும் கடலினில் களிக்கிறார்கள். 

ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 35-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகள் குறித்து தெற்காசிய மீனவதோழமை அமைப்பு எடுத்த புள்ளி விவரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பின் செயலாளர் ஆரோக்கியராஜ் கூறியதாவது:

சுனாமி, புயல் போன்ற பேரிடர்கள் தவிர, சாதாரண சூழலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து கீழே விழுவது, படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சை பெறமுடியாமல் போவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் சென்று, அங்கேயே தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் குமரி மாவட்ட மீனவர்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு, தகவல்தொடர்பு இன்மையால் 75 சதவீத இறப்பு ஏற்படுகிறது.

200 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு புயல், மழை நேரத்தில் தகவல்களைப் பரிமாற உபகரணங்கள் இல்லை. 10 விசைப்படகுக்கு ஒரு சேட்டிலைட் போனை, அரசு வழங்கியுள்ளது. பேரிடர் காலத்தில் இவற்றின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ரேடியோ போன் வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழில் அதிகம் நடைபெறும் கன்னியாகுமரியில் கடலில் காணாமல் போனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

குளச்சலைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பொறுப்பாளர் ரக்சன் கூறியதாவது: வானிலை எச்சரிக்கையால் பாதி நாட்களுக்கு மேல் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாமல் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நாட்களில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும்.

வளைகுடா நாடுகளில் தங்கி அரேபிய முதலாளிகளிடம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததால் சிறைபிடிக்கப்படுவதும், கடலிலேயே மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்பிடி தொழிலில் பாதுகாப்பில்லாததால் மீனவ இளைஞர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர் என்றார்.

எனவே, மீனவர்களின் உணர்வுகளை மதித்து இவர்களை வாழ்த்துவோம். 

இன்று உலக மீனினம் நாளை
முன்னிட்டு சில திரையில் நீந்திய மீன்கள்
பாடல்கள் (Clips)

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி