டால்ஸ்டாய்
இன்று லியோ டால்ஸ்டாய் நினைவு நாள்
நவம்பர் 20, 1910 ல் டால்ஸ்டாய் தனது 82வது வயதில் மறைந்தார்.
தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலே டால்ஸ்டாய் புதைக்கபட்டார். அவருக்குக் கல்லறை அமைக்கபடவில்லை. புல்வெளியில் தான் அவரது புதைமேடு காணப்படுகிறது. ஏழை விவசாயி ஒருவனைப் போலவே தானும் புதைக்கப்பட வேண்டும் என்று டால்ஸ்டாய் விரும்பினார்.
ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் டால்ஸ்டாயை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவர் பற்றிச் சிறப்புரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். அவரது படைப்புகள் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
டால்ஸ்டாயின் கடைசி நாட்களை வைத்து அஸ்தபோவ் ரயில் நிலையம் என்று ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறேன்.
இதன் அடுத்தக் கட்டமாகத் தற்போது டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றை முதன்மைப்படுத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.
நாவலின் தலைப்பு : மண்டியிடுங்கள் தந்தையே
தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்றே இதை அழைக்க விரும்புகிறேன்.
230 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கையோடு அந்தக் காலக் கட்ட ரஷ்ய வாழ்வினையும் விவரிக்ககூடியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதை எழுதி வந்தேன்.
தற்போது இந்த நாவலின் இறுதிகட்டத் திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நாவல் 2021ல் வெளியிடப்படும்.
-நன்றி / எஸ். ராமகிருஷ்ணன்
Comments