கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்: 29-11-1908


நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908- ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக, ஏழ்மை வாழ்க்கையில் இவரது இளமைப் பருவம் தொடங்கியது.. பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்க்கையில் நுழைந்தார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936-களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.

பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். இவரது மனைவி மதுரம், இவரும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.
நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர்.

பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர்.

கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர். அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர்.

அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

1957- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30- ஆம் தேதி தனது 49-ஆவது வயதில் கலைவாணர் மறைந்தார். தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டி பெருமை சேர்த்தது.

இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகள், குளிர் சாதன வசதியுடன் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கும் விடப்படுகின்றது.

நன்றி: மக்கள் ஓசை 


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி