சர் ஜகதீஷ் சந்திர போஸ்
சர் ஜகதீஷ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது
போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான அவர் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தமது கல்வியைக் கொல்கத்தா, கேம்பிரிட்ஜ, லண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தார். 1885இல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை, போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார். இவரது மனைவி பிரபல சமூக சேவகி அபலா போஸ்
போஸ் தமது 19ஆவது வயதிலேயே பட்டப் படிப்பை முடித்துவிட்டார்; பின்னர் கேம்பிரிட்ஜ் சென்று அங்கு தமது கல்வியை 1884ஆம் ஆண்டு நிறைவு செய்தார். போஸ் தாம் ஐ.சி.எஸ். முடித்துவிட்டு அரசில் உயர் அதிகாரியாக வரவேண்டுமென்று விரும்பினார். தந்தைக்கும் அதில் விருப்பம் இருந்தாலும், மகன் உயர் படிப்பு முடித்துச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டுமென்று விரும்பினார். லண்டனில் இருக்கும்போது போஸ் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்; ஆனால் அவர் பி.எஸ்சி இல் அறிவியலும், மருத்துவமும் படித்து வந்தார். இந்நிலையில் லண்டனில் லார்ட் ரிலே (Lore Rele) என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.
கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜகதீஷ் சந்திர போஸுக்கு இயற்பியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது; ஆனால் ஊதியத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அதனால் அவர்கள் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால் போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார்; திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு, ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது. அவ்வாறு தரப்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டு போஸ் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்; அங்கு தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அடிப்படையில் இயற்பியல் அறிஞரான அவர் ரேடியோ அலைகளில் மிகுதியும் ஆய்வு நடத்தினார். மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார்; இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது. 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை (electromagnetic waves) உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித்
(quasi-optical) தன்மைகளைக் கண்டறியக்கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார். அனைத்து வகையான தூண்டல்களுக்குமான
(stimuli) பொதுவான மின் துலங்கல்களையும் (responses) கண்டறிந்தார்.
மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை
(photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு.
போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை
(Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்; தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The
Nervous Mechanism of Plants) என்பது மற்றொரு நூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide)
என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது; தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது; எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.
1915ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன” என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். தாமே வடிவமைத்துத் தயாரித்த இந்தியக் கருவிகளின் துணைகொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார். 1920ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றதன் மூலம் போஸ் அவர்கள் இந்திய அறிவியலுக்குப் பெருமை தேடித் தந்தார்.
தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார்.
கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை அங்கு செய்து தந்தார். போஸின் பல்வேறு அறிவியல் சாதனைகளையும், ஆய்வுகளையும்,
கண்டுபிடிப்புகளையும், குறிப்பாகத் தாவர இனங்களில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் பாராட்டி கல்கத்தா மக்கள் கழகம் அவருக்கு 1928ஆம் ஆண்டு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அப்போது அவர் பின்வருமாறு கூறினார்:
“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை,
ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இத்தகு சிறப்பு வாய்ந்த போஸ் அவர்கள் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் இயற்கையுடன் இணைந்தார். மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை,
பொறுமை ஆகியவைகட்கு உறைவிடமாய் விளங்கிய ஜகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரு வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்தார் எனில் அதில் மிகையேதுமில்லை
Comments