'கவுண்டர்' பெயரை நீக்க முடியாது-
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார். தமது பெயருக்கு பின்னாள் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம் அதை நீக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செலின் கவுண்டர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில் ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான குழு அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மருத்துவரான டாக்டர் விவேக் மூர்த்தி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பிடித்திருக்கிறார்
செலின் கவுண்டருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் டாக்டர் செலினுக்கு வாழ்த்துகளைக் கூறியிருந்தனர். இதனிடையே ட்விட்டர் தளத்தில் டாக்டர் செலினுக்கு பின்னால் இருக்கும் கவுண்டர் பெயர் குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனை நீக்கலாமே என சிலர் வலியுறுத்தினர்.
இதற்கு ட்விட்டரில் செலின் கவுண்டர் அளித்த பதில்: என்னுடைய பெயரின் பின்னால் கவுண்டர் பெயர் போட்டிருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். என்னுடைய தந்தை 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். அவரது நடராஜன் என்ற பெயரை உச்சரிக்க அமெரிக்கர்கள் தடுமாறினர். அவர்களுக்கு கவுண்டர் என உச்சரிப்பது எளிதாக இருந்தது. 1970களில் நான் பிறப்பதற்கு முன்னதாகவே என்னுடைய தந்தை கவுண்டர் என பெயரை மாற்றிக் கொண்டார்.
என்னுடைய பெயர் என்னுடைய பெயர்தான். அது என்னுடைய வரலாறு. என்னுடைய அடையாளத்தின் ஒருபகுதி. நான் திருமணமான பின்னரும் கூட என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் என்னுடைய பெயரை நான் மாற்றவும் மாட்டேன். இவ்வாறு செலின் கவுண்டர் கூறியிருக்கிறார்.
Comments