பா.ஜ.க தலைவர்களுடன் நட்பு; பக்தர்களிடம் ரூ.65 லட்சம் மோசடி!’


சொகுசு காரில் வலம்வந்து பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த பிரபல சாமியாரை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.







வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர் `சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற்பெயர் சாந்தகுமார். அரசுப் பணியிலிருந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிக உணர்வால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து, வேலூரை அடுத்துள்ள ஸ்ரீபுரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்குச் சேவை செய்வதற்காக அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.


பின்னர், தங்கக்கோயில் சாமியாரிடமிருந்து விலகி தனியாக ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரா உட்பட பக்கத்து மாநிலங்களிலுள்ள கோயில்களுக்கும் சென்று கும்பாபிஷேகத்தை நடத்துவது, யாகம் வளர்ப்பது, கோ மாதா பூஜை செய்வது எனப் பல்வேறு சிறப்பு பூஜைகளை முன்னின்று நடத்திவந்தார்.


பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பலருடனும் சாந்தா சாமியார் நட்புபாராட்டுவதால், அவர் பிரபலமடைந்தார்; அவரின் செல்வாக்கும் கூடியது. இதனால், `இந்து ஆச்சார்ய சபா’ என்ற அமைப்பின் தமிழகத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா சாமியார் நியமிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அப்போதிலிருந்து மற்ற சாமியார்களுக்கும், சாந்தா சாமியாருக்கும் உரசல் ஏற்படத் தொடங்கியது. இதற்கிடையே, பெங்களூரைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவருடன் சாந்தா சாமியாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த ரெட்டி மூலமாகத்தான் சாமியார் அறக்கட்டளையைத் தொடங்கியதாகவும் சொல்கிறார்கள்.


சாமியாரின் வளர்ச்சிக்காக கமலக்கார ரெட்டி லக்ஸரி காரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த சொகுசு காரில்தான் சாந்தா சாமியார் பூஜைகளுக்காக சென்றுவருகிறார். சாந்தா சாமியாரின் பணப் பரிவர்த்தனை தொடர்பான மொத்த கணக்கு வழக்குகளையும் கமலக்கார ரெட்டிதான் கவனித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தன்னைத் தேடிவரும் பக்தர்களில் வசதியானவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபடத் தொடங்கினார் சாந்தா சாமியார்.


``பெங்களூரில், எனக்குத் தெரிந்த முக்கியப் பிரமுகர் இருக்கிறார். அவருடன் இணைந்து பிஸினஸ் செய்கிறேன். நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்புப் பணம் கிடைக்கும்’’ என்று பக்தர்களிடம் பணத்தாசை கதை அளந்திருக்கிறார்.





சாமியாரின் பேச்சை நம்பி ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த பென்ஸ் பாண்டியன், ஹரீஸ்குமார் ஆகியோர் 10 லட்சம் ரூபாயும், சங்கர் என்பவர் 10 லட்சம் ரூபாயையும் கொடுத்திருக்கிறார்கள். இவர்களைப்போலவே, வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவர் 45 லட்சம் ரூபாயை சாந்தா சாமியாரிடம் கொடுத்திருக்கிறார். இவ்வளவு பணத்தையும் பெற்றுக்கொண்ட சாமியார், பெங்களூரிலிருந்து தன்னை இயக்கும் கமலக்கார ரெட்டியை வரவழைத்து பணத்தைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பணத்தைக் கொடுத்தவர்களிடம் சில மாதங்கள் கழித்து, ``என்னுடைய பார்ட்னர் ஏமாற்றிவிட்டார். உங்களது பணத்தை எப்படியாவது புரட்டி நானே கொடுத்துவிடுகிறேன்’’ என்று நாடகமாடியிருக்கிறார்.







 






பணத்தை இழந்த நால்வரும் சாமியாரையே வட்டமடித்துக் கொண்டிருந்தனர். ``அவரும் பணத்தைத் தருவதாக இல்லை; இவர்களும் விடுவதாக இல்லை’’ என்கிற கதையாக மாதங்களும் உருண்டோடின. பணத்தைக் கொடுத்தவர்கள் நச்சரித்தபோது, ஆத்திரமடைந்த சாந்தா சாமியார், `சூனியம்’ வைத்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட நால்வரும் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி மயில்வாகனைச் சந்தித்து சில தினங்களுக்கு முன்பு புகாரளித்தனர். எஸ்.பி உத்தரவின்பேரில், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆற்காடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என சாந்தா சாமியார்மீது நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.









Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி