தீபாவளி மலர் 2020 (2 )
தீபாவளி மலர் 2020
பீப்பிள் டுடே இணைய பத்திரிகையின்
தீபாவளி மலரை ( 2020)
14.11.2020
உங்களுக்கு
வழங்குகிறோம்
சென்ற 2019ம் வருடத்திலும்
இணைய பத்திரிகை தொடங்கிய 10 நாட்களுக்குள்
வழங்கினோம்
அப்போது ஒவ்வொரு பகுதியாக இலக்கியம். Aanmigam.கவிதை இப்படி
இந்த வருடம் புத்தகம் போல தொடர்ந்து வாசிக்கும் படி அமைத்துள்ளேன். நமது
பத்திரிகைகளின் பாரம்பரியம் போல தான் இந்த மலரிலும்
கவிதை. சிறுகதை. கட்டுரை. ஆன்மீகம். சமையல். நிழற்படம். ஓவியம். சினிமா, சிரிப்பு இப்படி அனைத்தும் இருக்கும்
எங்கள் இணைய பத்திரிகை சிறிய அளவில் தான் வளர்ந்து கொண்டு வருகிறது.
பிரபலங்கள் எழுத்துக்ளை பெறுவது கடினம்
உங்களை போல நண்பர்கள் வாசகர்கள் இவர்களின் படைப்புகளே
இந்த மலரின் சிறப்பு அம்சம். படைப்புகளை ஒரே மலரில் முழு மையாக கொடுக்க நினைத்தேன். அதற்கு இணையம் சரி பட்டு வரல. அனைத்தும் பதிவேற்றுவது கடினம். ஆகவே மூன்று மலர்களாக வழங்கியுள்ளேன்
பாருங்க. படியுங்க
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள்
உமாகாந்த்
===============================================================================
கவிதை
கசடறல்
( To err and correct )
அடித்து எழுதுங்கள்
குழந்தைகளே
அழித்து எழுதுங்கள்
தவறெனத் தெரிந்தவுடன்
திருத்தி எழுதுங்கள்
தவறுகள் நிரம்ப வருமென்று
எழுதத் தயங்கி ஒதுங்காதீர்
தவற்றைச் சுட்டிக் காட்டியதும்
சரியாய் எழுதி வெல்லுங்கள்
முதல் முறை எழுதும்போதே
தவறின்றி எழுதிய தெல்லாம்
மனதில் தங்காது
தவறாய் எழுதிக் குட்டுப் பட்டுத்
திருத்திக் கொண்டால்
எளிதில் மறவாது
பிறரும் தவறுகள் செய்யலாம்
ஒருமுறை பரிவாய்ச் சொல்லுங்கள்
பெரிதாய் அதையே முன்வைத்து
பலமுறை குறையாய்ப் பேசாதீர்
உலகம் வியக்கும் உண்மைகள் கண்ட
அறிவியல் அறிஞர் பல்லோரும்
தவறு செய்து சருக்கிய பின்பு
திரும்ப முயன்று வென்றவரே
தவற்றை ஒப்புக் கொள்ளாமல்
படிப்பினை பெற்றுத் திருந்தாமல்
தவற்றில் உழல்வார் சிலருண்டு
அவர்களை விட்டு விலகுங்கள்
அறியாத் தவறுகள் குறையில்லை
தவறி விழுவது பிழையில்லை
விழுந்த பின்னர் துவளாமல்
எழுந்து நிமிர்வதே வெற்றி
வெ,பெருமாள்சாமி
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மாமிசங்களின் கதை
மாடிக்கார மனித மாமிசம்
மீன் மாமிசம் நறுக்கிவிட்டு
மிச்ச மாமிசத்தைத் தெருவில் எறிந்தது .
நொண்டி நாய் மாமிசம்
அதைச் சாப்பிட மூன்று காலில் பாய்ந்தது .
கார்க்கார மாமிசம்
பிரேக்கை அழுத்த மறந்ததால்
நாய் மாமிசம் மீன் மாமிசத்துடன் கலந்தது.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்தால்
காக்கை மாமிசங்கள்
நாய் மீன் மாமிசங்களுக்குச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
--ஸ்ரீதர் சாமா
==============================================================================
நகைச்சுவை கட்டுரை
" அன்பு சூழ் உலகு "
" மோகனா.. மோகனா.."
"சட்டென பொங்கிய பாலை அடுப்பில் இருந்து இறங்கி வைத்து விட்டு சுதாரித்து கொண்டு சொல்லுங்க என்றாள்" மோகனா..
" என்ன யோசனை?" என்றான் ராம்..
" எல்லாம் கற்பகம் அம்மாவை பற்றி தான்" என்றாள்..
" ஏன் அவங்களுக்கென்ன? "
" இந்த லாக்டவுனால் ஓரளவுக்கு மிடில் கிளாஸ் குடும்பமான நாமே ரொம்ப தவிச்சு போயிட்டோம்..
கற்பகம் அம்மா நிலைமை நினைத்து தான் ரொம்ப கவலை.. இந்த வருஷம் அவங்க பொண்ணுக்கு தலை தீபாவளி வேற.. பாவம் ரொம்ப சிரம படுவாங்க.."
கற்பகம் அம்மா மோகனா வசித்த பழைய தெருவில் குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்..
அந்த தெருவில் உள்ள அனைவரும் கற்பகம்மாளை பெயர் சொல்லியே அழைப்பர்..ஆனால் மோகனா மட்டுமே வாஞ்சையுடன் கற்பகம்மா என அழைப்பாள்..
மோகனா ஒரு நாள் வாசலில் குப்பை டப்பாவை வைக்கவில்லை என்றாலும், "என்னம்மா ஆச்சு.. வேலையில் மறந்துட்டயா? , உடம்புக்கு ஏதும் சரியில்லையா இரண்டு நாளா வெளியில் வரலையேனு " அக்கரையோடு கற்பகம் விசாரிப்பாள்..
வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு போகறப்ப வந்து கேட்டுட்டு மோகனா வீட்டு வாசலை சொல்லாமலேயே சுத்தம் செய்து கொடுப்பாள் கற்பகம்..
" மோகனா வுக்கு பொதுவாகவே இரக்க சுபாவம்.. கற்பகத்துக்கு மட்டுமில்லை.. அந்த தெருவில் காய் விற்பவர், உப்பு விற்பவர் , கோலமாவு விற்கும் பாட்டி என அனைவர் மீதும் அன்பாகவே இருப்பாள்.."
"அவர்களும், அவர்கள் மனக்குறையை மோகனாவிடம் கொட்டுவார்கள்.. அவர்களுக்காகவும் மோகனா ப்ரார்த்தனை செய்வாள்
"
" ஆனால் , ராம் எதார்த்தவாதி..எதற்கும் அலட்டிக்க மாட்டான்.. நடப்பவை நடந்தே தீரும்.. நம்மால் மாற்ற முடியாது" என நினைப்பவன்..
இப்பொழுதைய கவலை எல்லாம் தன் நிலைமையை விட வறுமைகோட்டிற்கு கீழ் இருக்கும் கற்பகம்மாள் வீட்டு கவலை தான் மோகனாவை பெரிதாய் உறுத்தியது"
"ராம்.. இந்த வருஷம் தீபாவளிக்கு நீங்க எனக்கு எந்த பட்ஜெட்க்கு புடவை, பாப்பாக்கு எவ்ளோக்கு வாங்கி கொடுக்கனும்டு முடிவு பன்னியிருக்கீங்க? " என்றாள்..
" எனக்கு ஏதும் வேண்டாம் மோகனா.. உனக்கு 5000-6000, பாப்பாக்கு 4000 முடிவு பன்னியிருக்கேன்.. அதற்கு மேல் பட்ஜெட் முடியாதுமா " என்றான்..
" பாப்பாக்காக வெடி பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ் "
"ராம்.. நான் ஒன்னு சொல்றேன்.. கேட்கறீங்களா?"
" சொல்லு மோகனா ! "
" இல்லை எனக்கும் பாப்பாக்கும் சொன்ன அந்த 10000 ரூபாய், அப்புறம் வெடி பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ் எல்லாத்தையும் கற்பகம்மா கிட்ட கொடுப்போமா என்றாள்"
" என்ன மோகனா..நம்ம குழந்தை ஏங்க மாட்டாளா? என்றான்.."
" சின்ன குழந்தைங்க அவ.. நம்ம செஞ்ச புண்ணியம்.. இயற்கையாவே எல்லாத்தையும் புரிஞ்சுக்கற மனசு இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கான்.. அவளுக்கு நவராத்திரி அப்போ சுஜா மாமி ஆத்தில் வைத்த பட்டுபாவாடை அப்படியே இருக்கு.. புதுசு தான்.. அதை தீபாவளிக்கு போட்டு விட்டுறளாம்.. தீபாவளி ஸ்வீட் வீட்லயே அவளுக்கு பிடித்த குலோப் ஜாமூன் செஞ்சு கொடுத்திடலாம்..நீங்க என்ன சொல்றீங்க?"
" ....."
" என்ன ராம் சொல்லுங்க.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம் "
" சிரித்தபடியே சொன்னான் ராம்.. தனக்கு இது வேணும், அது வேணும்னு கேட்பாங்க.. நீ என்னன்னா இப்படி அடுத்தவங்க முகத்தில் சந்தோஷத்தை பார்க்க உன் சந்தோஷத்தக கூட தள்ளி வைக்கிற" என்றான்..
" அதில்லைங்க.. ஏதோ நம்மால் முடிந்தது.. இந்த வருட தீபாவளியை சிம்பிளா கொண்டாடுறதில் நமக்கு பெரிதாய் ஏதும் பாதிப்பு இல்லை.. ஆனால் கற்பகம்மா வீட்டில் அப்படியில்லை.. அவங்க பொண்ணுக்கு தலை தீபாவளி .. ஏதோ கொஞ்சமாவது அவங்க சக்திக்கு அவங்க பொண்ணுக்கு செய்யனும்னு ஆசை இருக்கும் இல்லையா..
அவ்வளவு ஏன்.. ? நம்ம தலை தீபாவளிக்கு நீங்க எவ்வளவோ சொல்லியும் எங்கம்மா எங்கப்பா கேட்டாங்களா? அவங்க சக்திக்கு மீறி செஞ்சாங்கல்ல.. அப்போ ஏன் இப்படி எனக்காக கஷ்டபடுறீங்கனு சொன்னப்போ , எங்கப்பாவும் அம்மாவும் இதில் தான் மா எங்களுக்கு சந்தோஷம்னு சொன்னாங்க..
கற்பகம்மாவும் அப்படி தான நினைப்பாங்க..
இந்த லாக்டவுனால் எல்லாருக்கும் பணபிரச்சனை வேற..பாவம் அதான் " என்றாள்..
" சரி.. மத்தவங்களை சந்தோஷபடுத்தி பார்க்கறது தான் உண்மையான தீபாவளினு எங்கப்பா சொல்வார்..
..நாளை அவங்க கிட்ட கொடுத்திடு" என்றான் ராம்
மறுநாள் கற்பகம்மா, கிட்ட கொடுத்து ஹேப்பி தீபாவளிம்மா.. என்றாள்..
" உன் குடும்பம் நல்லா இருக்கனும் தாயி.. உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப" என்று சொல்லியபடியே கண்ணில் வழிந்தநீரை புடவையால் துடைத்து சென்றாள்..
சமையல் வேலையில் மூழ்கி இருந்த மோகனா காலிங்பெல் அடிக்க.. கதவை திறந்தாள்..
கொரியர் வந்திருக்கு.. கையெழுத்து போடுங்க..என்றார் கொரியர் பாய்..
வீட்டுக்குள் வந்து பார்சலை பிரித்து பார்த்தாள்.. அதில் பட்டு புடவை, பட்டு பாவாடை, அவள் கணவருக்கு வேஷ்டி சட்டை என இருந்த்து..
கொரியரில் இருந்த முகவரிக்கு போன் செய்து விசாரித்தாள்..
" எதிர்திசையில் போனில் பேசியவர்" மேடம், நீங்க ஆறு மாசத்துக்கு முன்னால் எங்க கடையில் பர்சேஸ் பன்னியிருந்தீங்க.. அப்போ உங்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்திருந்தோம்.. 1000 பேருக்கு அவங்க என்ன துணி எடுக்கறாங்களோ அதே மதிப்பில் ஆடை பரிசு என அறிவித்திருந்தோம்.. அதில் உங்க குடும்பம் தேர்வாகியிருக்கிறது.. லாக்டவுன் சமயம் என்பதால் உடனே பரிசை அனுப்ப முடியலை.. அதான் தீபாவளி சமயத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளோம்.. " என்றார்..
" ரொம்ப நன்றிங்க " என்றாள் மோகனா..
" ராம் வீட்டிற்கு வந்ததும் , " பார்த்தீங்களா ராம்.. நான் ஏதோ பெரிசா என் சந்தோஷத்தை விட்டு கொடுத்தேனு சொன்னீங்க.. கடவுள் பாருங்க இப்போ நமக்கு நாம் எதிர்பாராத பரிசு கொடுத்திருக்கார் என்று பார்சலை காட்டி விவரத்தை " சொன்னாள்..
" அன்பு சூழ் உலகு மோகனா.. நாம என்ன மத்தவங்களுக்கு கொடுக்கறோமோ.. அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும்" என்றான்
" ஐ.. சூப்பரான டிரஸ்.. செலிபிரேசன் மூடு ஸ்டார்ட்" என்று குழந்தை யாழினி சொல்ல அவர்கள் வீடே அவர்களின் சிரிப்பில் மத்தாப்பூவாய் ஒளிர்ந்தது..
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
# ஜெயந்தி சதீஷ் , ஸ்ரீவில்லிப்புத்துர்
===============================================================================
ஆன்மிகம்
கிறிஸ்துமஸ் வரலாறு
*விண்ணுலகில் இருந்து மண்ணுலகில் மனிதனாக அவதரித்த இறை தூதர் இயேசுபிரான் #Christmas*
சென்னை: இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பாவங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக்கிடந்த மக்களை நல்வழிப்படுத்த தேவன் இயேசு, மேய்ப்பனாக வந்தார். தனது ரத்தத்தை ஒப்புக்கொடுத்து பாவிகளை மீட்டெடுக்க வந்த மீட்பர். தேவதூதன் அவதாரம் பற்றிய கதைகளை கேள்விப்பட்டிருந்தாலும் கிறித்துமஸ் கொண்டாட்டம் பற்றிய வரலாறை இந்த கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளில் தெரிந்து கொள்வோம்.
இயேசுவின் ஜனனம் எப்போது நிகழ்ந்தது என்று பலரும் பலவிதமாக சொல்லப்பட்டாலும் நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது..." என்ற வேத வசனங்களின் அடிப்படையில் நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தேவாலயங்கள் ஒன்றுகூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகின்றன.
முதன் முதலில் கிறிஸ்துமஸ் ஜனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது! இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக முடி சூட்டப்பட்டான்.
கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது. இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.
டிசம்பர் மாதம் 25ம்தேதியிலிருந்து ஜனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நட்களும் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் பல ஊரகப்பகுதிகளில் கடைப்பிடித்திருக்கின்றனர். இந்த நாட்களில் ஆடல் பாடல் என்று தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். இப்போது ஜனவரி 1 வரை கொண்டாடி மகிழ்கின்றனர்.
கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் உருவானதுதான் கேரல் எனப்படும் குழு நடனப் பாடல்! கிராமங்களில் இதற்கென்றே பாடற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்களில் பாடுவதையும், சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலாப் போவதும், தங்கள் வீட்டருகே வரும்போது அவர்களுக்கு குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். இன்றும் பல நாடுகளில் சில இடங்களில் இத்தகைய குழுப்பாடல் பாடி வலம் வருவதைக் காணலாம். மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.
அந்தோணிசேவியர்
===============================================================================
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
******************************************************************************************************************
அறிவியல்
பூமிக்கு மிகவும் ஒத்த கிரகம் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பூமி-அளவு, வாழக்கூடிய மண்டல கிரகம் NASA’s Kepler space (விண்வெளி )தொலைநோக்கி மூலம் கணிக்கப்பட்டது என ஏப்ரல் 15, 2020-ல் அமெரிக்காவில் நாசா இயற்பியல் விஞ்ஞானிகள் குழு அறிவித்தது.
பூமியை விட 6% பெரிய பாறை அன்னிய கிரகமான கெப்லர்-1649 C மேற்பரப்பில் திரவ நீர் இருக்கிறதா ? இந்த Kepler 1649 C எனும் ஒரு புதிய உலகம், சிக்னஸ்( Cygnus ) விண்மீன் தொகுப்பில் ( Galaxy )-யில் 302 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
வானியற்பியல் ஜர்னல் கடிதங்களில் ஒரு புதிய ஆய்வறிக்கை :
வானியலாளர்கள் தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இது பூமியின் அளவைப் போன்றது.
“அளவு ( size ) மற்றும் வெப்ப நிலையை
பொறுத்தவரை, இது கெப்லருடன் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு மிகவும் ஒத்த கிரகம்” என்று SETI நிறுவனத்தில் இணை ஆசிரியர் ஜெஃப் கோக்ஸின் கூறினார்.
Kepler-1649 C எனும் புதிய உலகம் சிக்னஸ் ( Cygnus ) விண்மீன் தொகுப்பில் 302 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கெப்லர்- 1649 c எனப்படும். இது பூமியிலிருந்து தெரியாத எம் வகை நட்சத்திரத்தை சுற்றிவருகிறது. எம்- வகை நட்சத்திரம் ஒரு குறைந்த நிறை கொண்ட நட்சத்திரமாகும். இது “ சிவப்பு குள்ளன்” ( Red Dwarf ) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கெப்லர் 1649 c கிரகம், அதன் புரவலன் நட்சத்திரம்( host star )-ஆன எம்-வகை ‘சிவப்பு குள்ளன்’ என அழைக்கப்படும் கெப்லர் 1649-ஐச் சுற்றிவருகிறது. ஆனால் இந்த புரவலள் நட்சத்திரம் சூரியனைவிட மிகச் சிறியது என்றாலும், பூமி எவ்வளவு அளவு ஒளியை, தனது நட்சத்திரமான சூரியனிடமிருந்து பெறுகிறதோ அந்த அளவில் 75% சூரிய ஒளியை இந்த கெப்லர் பெறுகிறது. Kepler-1649 c-யின் அளவு நமது பூமியின் அளவில் 1.06 மடங்கு ஆகும். தனது நட்சத்திரத்தை கெப்லர் கிரகம் 19.5 நாட்களில் சுற்றிவருகிறது. அதாஙது Kepler-1649 c-இல் ஒரு வருடம
என்பது நம் பூமியில் 19.5 ( பத்தொன்பதரை) நாட்களுக்கு சமம்.
காலநிலை : கெப்லர்-1649- c கிரகத்தின் காலநிலை மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது. இது பூமியைப் போன்ற வெப்பநிலையாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கெப்லர் 1649 c கிரகத்தின் வளிமண்டலத்தின் கலவை என்ன எனபதுபற்றி சரியாகத் தெரியவில்லை.
புரவலன் நட்சத்திரம் ( hot star ) கெப்லர்-1649 ( எம் வகையான ஒரு ‘குள்ள நட்சத்திரம்’ ) இதன் ஆரம் ( radius ) நமது சூரியனின் ஆரத்தில் கால் பங்குதான் உள்ளது என மதிப்பிடப்படுகிறது. அதன் சுற்றுப் பாதையில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்களே உள்ளன எனவும், மற்றொன்று, கெப்லர்-1649 b
ஆகும் என மதிப்பிடப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, புரவலன் நட்சத்திலிருந்து ஒளிவீச்சுகள் இதுவரை காணப்படவில்லை. எனினும் , விஞ்ஞானிகள் அத்தகைய நட்சத்திரங்கள் சூரிய ஒளிரும் செயல்பாட்டிற்கு ஆளாகின்றன என்றும், அத்தகைய எரிப்புகள் எக்ஸோப்ளானெட்டின் வளிமண்டலத்தை அகற்றி, வாழ்க்கையின் வாய்ப்பைத் தடுத்திருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
எனினும், கெப்லர்-c வளிமண்லங்கள் மற்றும் திரவ/நீர்நிலைகள் பற்றி சிறப்பு வாய்ந்த சோதனைக் கருவிகள் உதவியுடன் தீவிர ஆராய்ச்சிகளை முனைந்து செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
தகவல் ஆர் ..ராஜமாணிக்கம்
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
Comments