1,000-ஆவது வெற்றியை பெற்ற ரபேல் நடால்
டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவு ஆட்டத்தில் 1,000-ஆவது வெற்றியை பெற்ற 4வது வீரர் என்ற பெருமையை ரபேல் நடால் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் 34 வயது கொண்ட ஸ்பெயின் நாட்டு நட்சத்திர வீரர் ரபேல் நடால் மற்றும் பெலிசியானோ லோபஸ் ஆகியோர் விளையாடினர்.
இதில், 4-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் லோபசை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவு ஆட்டத்தில் 1,000-ஆவது வெற்றியை பெற்ற 4வது வீரர் என்ற பெருமையை ரபேல் நடால் பெற்றுள்ளார்.
இதனால் ஜிம்மி கானர்ஸ் (1,274), ரோஜர் பெடரர் (1,242) மற்றும் இவான் லெண்டில் (1,068) ஆகியோர் 1,000 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று படைத்திருந்த சாதனை பட்டியலில் நடாலும் தன்னை இணைத்து கொண்டார்.
இதுபற்றி நடால், 1,000-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில், எனக்கு வயது முதிர்வு ஏற்பட்டு உள்ளது என்றே இதற்கு அர்த்தம் ஆகும். ஏனெனில் இந்த சாதனையை படைக்க நீண்ட நாட்களாக நான் விளையாட வேண்டி இருந்துள்ளது.
எனக்கு உதவி புரிந்த, நான் இந்த இடத்தில் நிற்க, எனது வாழ்வின் எந்த தருணத்திலும் உதவி புரிந்த மக்களுக்காக நான் மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது ஒரு சிறந்த தருணம். 1,000 என்பது சிறந்த எண் என தெரியும். இதனை கொண்டாட திரளான மக்கள் கூட்டம் இல்லையெனினும், பிரெஞ்சு கூட்டமைப்பின் தலைவர், அதிகாரிகள் மற்றும் பந்து எடுத்து போடும் சிறுவர்களுடன் இதனை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்
Comments