ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு


ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு காலமான தினமின்று

 




விடுதலைப் போராட்ட வீரர். அதே சமயம் தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தம தலைவர்.



ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்ற் இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார்.



தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார்.



1926ல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில் சேலம் பெ. வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் தேசீய காங்கிரஸ் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா.கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும்,1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.



15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார்.



இவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமானசெய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார்.



வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார்.இவர், கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.



இரங்கற்பா :-

ராகி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பா...

நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும்

ஆணவமில்லா வேந்தே !

அயர்வில்லா தேசபக்தி.

நீணெடுங்காலம் கொண்டோய் !

நீ எமை விட்டுச் சென்று

நாணடந்தாலும் நாங்கள்

நாளெல்லாம் நினைப்போம் உன்னை...

 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி