அணில் பளு தூக்கும் அதிசயம்
இரை தேடிய அணில் ஒன்று பளு தூக்குதலில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்கள் அசத்தலாக கிளிக் செய்யப்பட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளன.
சுவீடன் நாட்டில் பிஸ்ப்கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கீர்ட் வெஜ்ஜன் (வயது 52). இவரது தோட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் இரை தேடி சில அணில்கள் வருவது வழக்கம். இதற்காக அவர் மண்ணுக்குள் இரையை புதைத்து வைத்து விடுவார். அல்லது அவற்றுக்கு தெரியும்படி மண்ணின் மேல் பகுதியில் இரையை போட்டு வைத்து விடுவார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென யோசனை ஒன்று உதித்தது. அதனை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளார். இதன்படி, தனது வீட்டுக்கு அருகே இருந்த காட்டு பகுதிக்கு அவர் சென்றுள்ளார்.
அங்கே, அணில்கள் விரும்பி சாப்பிடும் பருப்புகளை குச்சி ஒன்றின் இரு முனைகளிலும் சேர்த்து கட்டியுள்ளார். பின்னர் அவற்றின் வருகைக்காக காத்திருந்துள்ளார்.
இதில் பிராவ்னி வகையை சேர்ந்த சிவப்பு அணில்களில் ஒன்று அந்த பகுதிக்கு வந்துள்ளது. அது, கட்டி வைக்கப்பட்டு உயரே தொங்க விடப்பட்ட பருப்புகளுடன் இருந்த குச்சியை தனது இரு முன்னங்கால்களாலும் பற்றி இழுத்தது.
இதன்பின்னர் அதனை தூக்கி கொண்டு அந்த அணில் ஓடியுள்ளது. இதனை வெஜ்ஜன் அடுத்தடுத்து புகைப்படங்களாக எடுத்து தள்ளியுள்ளார். அவர் உடனே இந்த புகைப்படங்களை எடுத்து விட முடியவில்லை. அதற்காக சில நாட்கள் காத்திருந்து இருக்கிறார்.
இதில் அவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்து உள்ளது. அவர் இந்த புகைப்படங்களை 3 மீட்டர் தொலைவில் இருந்து எடுத்துள்ளார். அணில் இரையை எடுப்பதற்காக துள்ளி குதித்து, தொங்க விடப்பட்ட குச்சியை கைகளால் பற்றி எடுத்துள்ளது. ஆனால் அது பளு தூக்குவது போன்று காட்சியளித்தது. இதனை யோசனை செய்து உருவாக்கி, புகைப்படங்களாக எடுத்த வெஜ்ஜனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Comments