கொரானா கால திவசம்

கொரானா கால திவசம்


 


  சிறுகதை  


                                 எஸ்.ஸ்ரீதர்



 


    பொதுவாக திவசம் என்றால் நடுத்தர குடும்பங்களுக்கு ஆசாரம், சிரத்தை எல்லாம் எங்கிருந்து வருமோ தெரியாது. `அதைத் தொடாதே, அங்கே நிக்காதே,   மொதல்ல குளி, மொதல்ல அதை நனை என்று கெடுபிடி பார்ப்பார்கள். ஆனால் சைனாக்காரன் எப்போது கொரானாவைத் திருப்பிவிட்டானோ அப்போதே அனைத்தும் விடைபெற்றுக் கொண்டுவிட்டது. இப்போது  முன்ஜாக்கிரதை யோடு பயமும் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும், எதைப்பார்த்தாலும் பயம்.


விடியற்காலையிலேயே வாத்தியார் எங்கேயாவது கிளம்பிப் போய்விடுவாரோ என்று பல் தேய்த்ததும் முதல் காரியமாக ஒரு நினைவூட்டல் கால் போடலாம் என்று போன் அடித்தால் அவர் தயாராக இருந்தார். பாவம், கொரானாவில் அடி வாங்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களில் புரோகிதமும் ஒன்று இல்லையா. .


`ஹலோ, பட்டு வாத்தியாரா?'


`ஆமா, ரகு மாமாவா? இதோ கிளம்பிண்டே இருக்கேன். இன்னும் ஒரு 20 நிமிஷத்திலே...'


`வாங்கோ. ரெண்டு பிராமின்ஸ்க்கு சொல்லிட்டீங்க இல்லையா.'


`அதெல்லாம் ஆச்சு.'


`வரும்போது ஜாக்கிரதையா சோசியல் டிஸ்டன்ஸ் பார்த்து வாங்கோ.'


`ஒருத்தர் ஸ்கூட்டர்ல என் பின்னாலேயே வர்றார். இன்னொருத்தரை அவர் பையன் ட்ராப் செய்யறான். இதுல என்னத்த இடைவெளி பார்க்கறது.'


`பாருங்கோ வாத்தியார். இல்லைன்னா  பிரச்னை. அப்பறம் நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கேட்டைத் தொடவேண்டாம்.'


`இது என்ன புதுசா?'


`கேட்டுக்கு மேலேயே சுவத்துல குச்சி வச்சிருக்கேன். அதால திறந்து மூடிக்குங்கோ.  வாசல் கிட்டயே ஒரு மஞ்சள் தண்ணி பக்கெட், மக்கு, பக்கத்திலே ஒரு சாதா தண்ணி பக்கெட் இருக்கும். மொதல்ல மஞ்சள் தண்ணி பக்கெட்ல கால் அலம்பிண்டு அப்பறம் சாதா தண்ணியிலே கால் அலம்புங்கோ. மூணாவதா ஒரு சொம்புத் தண்ணி இருக்கும். அது திவசம் பண்றப்ப பாத பூஜைக்கு. அதை பிராமின்ஸ்  அவங்களே காலுல ஊத்திக்கணும்.'


`என்னது?'


`ஆமாம். மாஸ்க், கையுறை எல்லாம் போட்டுண்டு வர்றீங்க இல்லையா?'


`வந்து வைக்கிறேன். என்ன பண்றது?'


`ஆமாம். தெருமுனைல ஜாக்கிரதையா வாங்கோ. எங்க தெரு நாய்ங்க கொஞ்சம் கோபப் பார்ட்டிங்க. மாஸ்க், கையுறைன்னு பார்த்தா விரட்டும்.போன வாரம் ஒரு வாத்தியாரைக் கடிக்க வந்துடுத்துங்க. இல்லேன்னா பேசாம ஒரு 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கிண்டு வாங்க. நான் வேணுமானா ரீ இம்பர்ஸ் பண்ணிடறேன். அதுங்க கோபமா வந்தா  டக்குன்னு பிஸ்கட்டைப் போட்டுட்டு அதுங்க அங்க பார்க்கற அந்த கேப்பிலே வந்துடலாம். அப்பறம் முக்கியம்.  காரியம் பண்றப்ப பிராமின்ஸ் ரெண்டு பேரையும் நல்லா  தள்ளி  உக்காரச் சொல்லுங்கோ.  நானும் 10 அடிக்குப் பின்னாலே தான் இருப்பேன்.’


'10 அடியா? சொல்ற மந்திரம் காதுல விழ வேண்டாமா?'


`அது பரவாயில்லைன்னா. நான் ஏற்கனவே ரெண்டு தடவை  திவச மந்திரம்லாம் நெட்ல பார்த்து வச்சிருக்கேன். தோராயமா சொல்லிடுவேன். தப்புன்னாலும் ...'


`சம்பாவனையெல்லாம் எப்படி? ஆன்லைன்லயா கேஷா? செக் வேணாம்.’


  அதெல்லாம் அழகா அரிசி, பருப்பு, வெல்லம் , வாழைக்காய், சம்பாவனை எல்லாத்தையும் மூணு பைல போட்டு தொங்கவிட்டுருக்கேன். ரெண்டு மஞ்சப்பை, ஒரு வெள்ளை பை. மஞ்சப்பை  பிராமின்ஸ்க்கு.  வெள்ளை உங்களுக்கு. எல்லாம் சொன்னபடி சரியாய் இருக்கும். எண்ணவே வேணாம்.'


`துளசி, எள், அக்ஷதை எல்லாம்..'


`ஆங். சொல்ல மறந்துட்டேனே. நாங்க 10 அடிக்குப் பின்னால இருந்து பாவனையா நமஸ்காரம் பண்றோம். நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்கோ. நீங்க ஹாண்டில் பண்ண அக்ஷதையை நேரா எங்க தலையில போட வேணாம். அதைத் தட்டுல வைச்சுட்டா நான் வெயில்ல காய வெச்சு பின்னால நாங்களும் போட்டுண்டு குழந்தைகளுக்கும் போடறோம். ஏன்னா இன்பெக்ஷன் பாருங்கோ.'


`பேஷ். நீங்க பரவாயில்லை. நிறையபேர் போனைப் பார்த்து தர்ப்பணம் பன்றான்.  சரி நான் கிளம்பி வர்றேன்.'


`மாஸ்க், க்ளோவ்ஸ் ஜாக்கிரதை.  தெரு மொனைல நாய் குரைச்சா பிஸ்கட். இல்லை ஒரு மிஸ்ட் கால் கொடுங்கோ. நான் ஓடி வந்துடறேன்.'


`அது பரவாயில்லைன்னா. இந்த கொரானா கெடுபிடிக்கு அது பரவாயில்லை. பாவம், வாயில்லாத ஜீவன். ஏமாந்தவனைத்தானே இப்ப எல்லாரும் கடிக்கறா. ஏதோ ஒரு நாட்டுல பிராணிகள் கடிச்சு கொரானா சரியாகுதான்னு ஆராய்ச்சி பண்றாங்களாமே. என்னைக் கடிச்சாலாவது பயம் சொஸ்தம் ஆறதா பாக்கலாம்.'


 


கற்பனை (கிட்டத்தட்ட நிஜம்)


எஸ்.ஸ்ரீதர்


அனாதை பிரேத கைங்கர்யம் டிரஸ்ட்


98407 44400


sridhar@indiainfoline.com


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி