பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.8/10/2020
அவருக்கான பதிவு.
செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமை தான் நமக்குச் செல்வம்
கையும் காலும் தான் உதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி
60 ஆண்டுகளுக்கு முன் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் சொன்ன கருத்து.
அன்றும், இன்றும், என்றும், எவருக்குமே பொருந்தும் இந்த பாட்டு
தத்துவங்களை முத்துக்களாய் தந்த கவிஞர் , 1930 ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை அருணாச்சலம், இவரும் ஒரு கவிஞர்.
தனது பத்தொன்பதாவது வயதிலேயே கல்யாணசுந்தரனார் கவியெழுத ஆர்வம் கொண்டிருந்தார்.
அகல்யா என்ற பெயரில் எழுதிய கவிதை பாவேந்தருக்கு பிடித்துவிட்டது.
அன்று முதல், பாவேந்தரின் செல்லப் பிள்ளையானார். தமிழ் தமிழோடு சேர்ந்தது
புரட்சிக் கவிஞர் கற்றுத்தந்த தமிழ், இவரது மொழிநடையால் தெரிந்தது, உலகம் பின்னால் இவரை உணர்ந்தது.
பொதுவுடைமை இயக்கம், கலையில் தமிழ் மொழியால் செய்து காட்டியவன் நம் பட்டுக்கோட்டையார்.
வேளாண் வெளிகளில் தந்த அறிவு
பாவேந்தர் தந்த தமிழ் மொழியறிவு
கம்யூனிசம் கற்றுத்தந்த கருத்தரிப்பு
இந்த மூன்றையும் உள்வாங்கி உள்வாங்கி
வெளிவந்தன யாவும் எழுச்சிமிக்க பாடல்களே
1954 ல், பாமரப் பாவலன் பாட்டெழுத வந்துவிட்டான்.
இதுவரை எவரும் கேட்காத நிலையில், உழைக்கும் மக்களுக்கு, உணர்ந்துகொள்ளும்படி தெம்பையும் அன்பையும் கலந்து பாடல்கள் பல புனைந்தான்.
அன்றைய திரைப்படக் கவிஞர்கள் உடுமலை நாராயணகவி, தஞ்சையின் ராமையாதாஸ், மருதகாசி, கு. மா. பாலசுப்ரமணியம், மாயவநாதன் போன்ற கவிஞர்களுக்கு ஆச்சரியப்பட வைத்தது பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்.
நடைமுறை வாழ்க்கையில், சொல்லப்படாதவையை சுட்டிக்காட்டிய கெட்டிக்கார கவிஞர்.
மக்கள் திலகம் என்ற முத்திரையை கட்டிக்காக்க, மக்கள் கவிஞரின் வரிகள் பலம் சேர்த்தது.
சமுதாய அக்கறையும் விழிப்புணர்வும் தன் பாட்டால் எளிய தமிழில் புரியும்படி சொன்னார்.
நாடோடி மன்னன் படத்தில்,
தூங்காதே தம்பி தூங்காதே
திருடாதே படத்தில்
திருடாதே பாப்பா திருடாதே
அரசிளங்குமரி படத்தில் படத்தில்
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
மகாதேவி படத்தில்,
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இப்படி, தன் பேனா முனையால் புரட்சி செய்து பல பாட்டுக்களை தமிழுக்குத் தந்தவன் தான் பட்டுக்கோட்டையார்.
இவர் பாடலில், பெரிய அலங்காரமில்லை. தமிழ் மரபுக்குரிய கட்டமைப்பும், கருத்துச் செறிவும் இருந்தது.
பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படம் இருந்தாலும், பொருள் நிறைந்த கருத்தில்பொருள் நிறைந்த கருத்தில் மக்களை சிந்திக்க வைத்தது,
களத்துமேடு என்றால்.
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி, சோம்பல் இல்லாமல் விதை விதைத்து என்றும்
கலை மிக்க பாடலாய்
முகத்தில் முகம் பார்க்கலாம்- விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்.
தன் காதலியை வசீகரிக்கப் படுத்தும் போது
உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
என்றும், கற்பனையின் உச்சம் தொட்டவர் இந்த மக்கள் கவிஞர்.
தன்னுடைய 29 ஆவது வயதில் இவர் கடைசியாக எழுதிய பாடல்
தானா எவனும் கெட மாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான்- இதப்
புரிஞ்சிகிட்டவன் அழமாட்டான். என முடித்தவர் தான்.
மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாருக்கும் ஒரே ஒற்றுமை.
நீண்ட காலம் இம்மண்ணில் வாழவில்லை என்றாலும், இவர்களின் கவிதைகள் தமிழ் மொழி இருக்கும்வாழ்ந்து கொண்டிருக்கும். வாழ்ந்துகொண்டே இவர்களையும் நினைவு கூறும்.
முருக.சண்முகம்
சென்னை
Comments