உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்
உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்
---- இயக்குனர் பிருந்தா சாரதி
இ
ந்த உலகம் இறந்த பிறகு பலருக்கும் நல்ல மனிதர் என்று பட்டம் கொடுக்கும். சாவு கொடுக்கும் சலுகை அது. ஆனால் வாழும்போதே நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் எஸ். பி. பி. அவர்கள். அது மிகவும் கடினம் . உண்மையிலேயே உள்ளும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்தக் குணம் எஸ். பி. பி. இடம் இருந்தது.
அவர் மேடைக்கு வந்தால் அங்கு ஒரு ஈரக் காற்றடிக்கும். அன்பு அலையடிக்கும். அவரது புன்னகை எல்லா முகங்களிலும் ஒளியேற்றும். பாடல்களால் இதயத்தை வருடுவார். பின் நல்ல வார்த்தைகளால் நம் உயிரைத் தொட்டுவிடுவார்.
அவர் பாடல் கேட்காத நாளே இந்த அரை நூற்றாண்டில் இல்லை. இனியும் பல நூற்றாண்டுகள் இருக்கப் போவதில்லை.
நேரில் பார்க்காத ஒருவரைக் கூட தம் குடும்ப உறுப்பினராக அவரை நினைக்க வைத்தார். எவ்வளவு நல்ல மனிதர்! தனக்குச் சமமாக அனைவரையும் மதிக்கக் கூடியவர்.
அதுதான் இன்று கவிந்திருக்கும் இந்த சோகத்திற்குக் காரணம்.
கந்தர்வக் குரல் கொண்ட அந்த மாபெரும் பாடகன் 40000 பாடல்களுக்கு மேல் பாடிவிட்டார். இந்திய மொழிகள் பலவற்றில் பாடிவிட்டார். ஆங்கிலத்தில் கூட பாடியிருக்கிறார். உயிரே உனக்காக படத்தில்( I want to be a rich man ) .ஓய்வின்றிப் பாடினார் . பல படங்களில் நடித்தார். பல நட்சத்திரங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார். ஆனால் ஒரு துளி கர்வமும் வரவில்லையே! எப்படி? ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஓர் அழகான குழந்தை... வளர்ந்த குழந்தை.
அவரது இழப்பு நெருங்கிய ஒருவரின் இழப்பாக தென்னிந்தியா முழுவதும் பரவியிருக்கிறது.
இந்திய சினிமாவின் சாதனை சரித்திரத்தில் ஒன்றை இழந்துவிட்டோம்.
அதைவிட மேலாக நம் இசைத் தோழனை இழந்து விட்டோம். உயிரின் நண்பனைப் பறிகொடுத்தோம்.
இதோ வானமும் இருள்கிறது. குமுறுகிறது. அழத் தொடங்கிவிட்டது. நாம் எம்மாத்திரம்?
எஸ். பி. பி. சார்...
கடவுளின் தேசம் உங்களை அழைக்கையில் நாங்கள் என்ன செய்யமுடியும்?
ஒரு பாடல் மௌனமானது.
கடவுள் தன் இசைக் கருவியைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
போய் வாருங்கள் சார். இனி உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம். ஒளிப்பதிவுகளில் உங்கள் முகம் பார்த்து ஆறுதல் அடைவோம்.
*
இயக்குனர் பிருந்தா சாரதி
Comments