ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி
ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி
செப்டம்பர் 25, 2020 13:16 IST
கோவை அருகே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி வகுப்பு எடுத்து வருகிறார்.
மாணவர்களுடன் அனாமிகா
கோவை:
தமிழகம்- கேரள எல்லையில் உள்ளது அட்டப்பாடி பழங்குடியினர் மலை கிராமம். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவைகள் இல்லை.
செல்போன், டி.வி. இல்லாதததால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் இங்குள்ள மாணவர்களால் கல்வி கற்க முடியாமல் அவதியடைந்தனர்.
இதே பகுதியில் உள்ள சோலையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர். இவரது மனைவி சஜி. இவர்களின் மூத்த மகள் அனாமிகா (வயது 14). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் விடுதியில் தங்கியிருந்த அனாமிகா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்கமுடியாமல் சிரமம் அடைந்தார்.
இதே நிலை நீடித்தால் கல்வியை இழக்க வேண்டும் என்று பயந்த அனாமிகா தனது தந்தையின் உதவியோடு கூரைகளால் ஒரு வகுப்பறையை உருவாக்கினார். தன்னை போலவே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களை வீடுவீடாக தேடிச்சென்று தான் உருவாக்கிய வகுப்பறைக்கு பாடம் படிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதன்படி அந்த கிராமத்தில் படித்து வரும் 10 மாணவ, மாணவிகள் படிக்க முன் வந்தனர். மாணவி அனாமிகாவுக்கு அவரது பள்ளியில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய 4 மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனை இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கும் அதே மொழிகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
தனது வகுப்பறையில் குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்துகிறார். அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். மேலும் தனது பாடங்களையும் அனாமிகா கற்று வருகிறார். மாணவியின் இந்த முயற்சி அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Comments