ரூ.60,000 கோடி ஆண்டவன் சொத்து தப்பியது
ரூ.60,000 கோடி ஆண்டவன் சொத்து தப்பியது
05-09- 2020 23:59
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆண்டன் சொத்து, அபகரிப்பில் இருந்து தப்பியது. சென்னையை அடுத்த, திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான, இந்த சொத்துக்களை, யாருக்கும் பதிவு செய்ய கூடாது என, பத்திரப்பதிவுத் துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் பி.ஜெகநாத் தாக்கல் செய்த மனு:
சென்னையை அடுத்த திருப்போரூரில், கந்தசாமி முருகன் கோவில்; மாமல்லபுரத்தில், ஆளவந்தான் நாயக்கர் அறக்கட்டளை உள்ளது.அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இவை உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, சென்னை புறநகரில், 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 60 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்த நிலங்களை அபகரிக்க, முயற்சிகள் நடக்கின்றன. பக்தர்கள் தானமாக அளித்த இந்த நிலங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து விற்பதற்கு, 20க்கும் மேற்பட்ட கும்பல்கள் முயற்சி செய்வதாக, பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
போலி ஆவணங்களை வைத்து, பத்திரப்பதிவு செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், அபகரிப்பாளர்களுக்கு உதவி செய்ய மறுப்பவர்களை, அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது, அனைவரது கூட்டுப் பொறுப்பு. சொத்துக்களில் வில்லங்கம் வராமல் இருப்பதை, வருவாய் துறை உறுதி செய்ய வேண்டும்.
கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், எந்த கஷ்டமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள், அபகரிப்புகள் நடக்கின்றன.
ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டால், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடக்காது. 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
எனவே, திருப்போரூர் கந்தசாமி முருகன் கோவில் மற்றும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஆளவந்தான் நாயக்கர் கோவில் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, 'சர்வே' செய்ய, வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
நிலங்களை அளவிட்ட பின், சர்வே எண், எல்லை, நில அளவு, 10 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல், நில வகைப்பாடு ஆகிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கோவில் மற்றும் அறக்கட்டளை நிலங்களுக்கான பதிவேடுகளை சமர்ப்பிக்கும்படி, நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.கோவில் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் தொடர்பாக, பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளவோ, வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என, பத்திரப்பதிவு ஐ.ஜி., மற்றும் திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் .இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
...அரசு தரப்பில் பதில் அளிக்க, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத் துறை சார்பில் பதில் அளிக்க, சிறப்பு பிளீடர் கார்த்திகேயன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர்.
திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் நாயக்கர் அறக்கட்டளையின் சொத்துக்கள் தொடர்பாக பத்திரப்பதிவு மேற்கொள்ளவோ மற்றும் வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என, பத்திரப்பதிவு துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில், தற்போதைய நிலை தொடரவும் உத்தரவிட்டனர்; அடுத்த விசாரணையை, வரும், 10ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Comments