மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சி
மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சி
ஆக 13, 2020
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி, மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
உலகின் பல இடங்களில் ஆச்சரியப்படும் வகையில் இயற்கை அமைந்திருக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ள ராயல் தேசிய பூங்காவானது இயற்கையின் மடியில் வீற்றிருக்கிறது. இங்குள்ள பசுமையான மரங்களும், இதமான தென்றலும், பறவைகள், பூச்சிகளின் சப்தமும் வேறு ஒரு உலகிற்கு நம்மை கொண்டுச் செல்லும். இதெல்லாம்விட, இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி தான் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சியானது, புவியீர்ப்பு விசைக்கு மாறாக, மேல்நோக்கி பாய்கிறது.
மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேலெழும்புவதால், நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இங்குள்ள காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கி.மீ ஆகும்.
இது தொடர்பாக எஸ்குவேர் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட பிரத்யேக கட்டுரையில், ‛மலைக்கு அருகில் பெருங்கடல் உள்ளது. கடலில் இருந்து வரும் பலத்த காற்று, மலையின் கீழ்ப்பகுதியில் மோதி, அதே வேகத்தில் மேலே எழுகிறது. இவ்வாறு எழும்போது, காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், நீர்வீழ்ச்சியும் மேல்நோக்கி பாய்கிறது,' எனக் கூறப்பட்டுள்ளது
.
Comments