கிஷோர் குமார்
கிஷோர் குமார்
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், ஹீரோ. பாடகர். அறுபதுகளில், தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா.. பாடலாசிரியர்.. நடிகர்.. இத்தனை விஷயங்களையும் ஜாலியாகச் செய்த மனிதர். இவ்வளவுக்கும் மேல், மனிதருக்கு ஒன்றின் பின் ஒன்றாக நான்கு திருமணங்கள் வேறு. எக்ஸெண்ட்ரிக் என்று- ம் பெயரெடுத்தவர்.
’கிஷோர் குமார் ஜாக்கிரதை’ என்று தனது வீட்டின் வாயிலில் எழுதி ஒட்டிவைத்தவர். அதேபோல், பணமில்லையெனில், என் வீட்டுக்கே வந்துவிடாதீர்கள் என்று ஒரு கறாரான கொள்கை வைத்திருந்தவர். ஸ்டுடியோ வரை சென்று, பணம் கொடுக்காததால் பாட மறுத்து வீடு திரும்பிய நிகழ்ச்சிகள் ஏராளம். தன் மீது கேஸ் போட்ட ஒரு தயாரிப்பாளரை, தனது வீட்டு அலமாரியில் இரண்டு மணி நேரம் பூட்டி வைத்தவர்.
இத்தனை விசித்திர குணாதிசயங்கள் இருந்தும், ஹிந்தித் திரையுலகம், கிஷோர் குமாரை இன்றும் கொண்டாடுகிறது என்பதுதான் விசேஷம்..
1929-ம் வருடம் இதே தேதியில் மத்தியப் பிரதேசத்தில் பிறந்த கிஷோருக்கு முறைப்படியான பாடல் பயிற்சியெல்லாம் இருந்ததில்லை. தொடக்கத்தில் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருக்கு அவர் படங்களில் பாடத் தொடங்கிய பிறகு ‘பாடகர்’ என்கிற அடையாளமே பிரதானமாக அமைந்தது. ஆல் இந்தியா ரேடியோவில் அவரது குரலில் ஒலிக்கும் சினிமாப் பாடல்களைக் கேட்பதற்காக ரேடியோ பெட்டி வாங்கிவைத்த நேயர்களும் உண்டு.
பின்னாளில், அதே ’ஆல் இந்தியா ரேடியோ’தான் அவரது பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது. அதற்கும் இந்திய ஜனநாயக வரலாற்றுக்குமே சீரிய தொடர்பு உண்டு. அது எமர்ஜென்சி காலகட்டம். 'இந்திரா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது' என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையே செல்லாததாக்கும் விதமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 10 ஆகஸ்ட் 1975 அன்று திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் இந்திய நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சிகரமான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்ததில் மக்கள், இந்திரா காந்தி தலைமையின்மீது தீவிர அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை எப்படியேனும் திருப்திபடுத்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு இருபது அம்ச திட்டத்தை உருவாக்கியது.
மே 4, 1976 அன்று மும்பையில் நடந்த கட்சி மாநாட்டில் இந்திராவின் இருபது அம்ச திட்டத்தை விளக்கிப் பாடும்படி அழைக்கப்பட்டார் கிஷோர் குமார். அழைத்தவர், அப்போதைய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா. “எங்கள் பிரதமரின் இருபது அம்ச திட்டத்தை விளக்கி நீங்கள் பாடவேண்டும்” என்றிருக்கிறார் சுக்லா. “பாடவேண்டும் என்பது கட்டளையா அல்லது கோரிக்கையா? எப்படி இருந்தாலும் என்னால் பாட முடியாது” என்று மறுத்துள்ளார், கிஷோர் குமார்.
இது, சஞ்சய் காந்தியின் காதுகளுக்கு எப்படியோ எட்டியது. இதையடுத்து கோபமடைந்த இந்திரா தரப்பு ஆல் இந்தியா வானொலியில் ஒரு வருடத்துக்குக் கிஷோரின் பாடல்கள் எதுவும் ஒலிக்க முடியாமல் தடை செய்தது. இப்போது இருப்பதுபோலத் தனியார் பண்பலைகள் இல்லாத காலமும் அது. இதனால், அவரது வாழ்வின் இருண்டகாலமாகவே அந்த நாட்கள் இருந்தன.
எமர்ஜென்சி காலம் முடிந்து அடுத்துவந்த 1977-ம் வருடத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் வெற்றிபெற்று அவரது அரசு பதவியேற்கும்வரை அந்தத் தடை அப்படியே இருந்தது. இருப்பினும், கலை மக்களுக்கானது... அதிகாரத்துக்கானது இல்லை என்பதில் தெளிவாகவே இருந்தார் கிஷோர்.
அவரின் சில பாடல்களை கேட்க
செய்தி பகிர்வு
நன்றி
ஆந்தை சினிமா அப்டேட் குழு
Comments