மங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை
மங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை
ஆந்தை இரவில் திரியும் பறவைகளில் ஒன்று. ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டி, பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாடும். முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், கொண்டையும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 டிகிரி வரை திருப்பவல்லது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவையாதலால், அவற்றின் கண்களுக்குச் சில அங்குல தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. எனினும், மங்கலான வெளிச்சத்திலும் சற்று தொலைவில் உள்ளவற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய திறன் கொண்டது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட வேட்டையாடக்கூடியவை. உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டு துண்டாகக் கிழிப்பதற்கு ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய அலகும் உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், கண்களில் தென்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன.
ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சில பன்னிரண்டு முட்டைகள் வரை இடுகின்றன. இவற்றின் கூடுகள் மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்
Comments