காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கண்டெடுப்போம்
மகிழ்ச்சி... காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கண்டெடுப்போம்...ஆகஸ்ட் 14, 2020 கானல் நீராகி, காணக்கிடைக்காத பொக்கிஷம்போல் மாறிக்கொண்டிருக்கும், மகிழ்ச்சியை மேம்படுத்துவது பற்றி படிப்போம். மகிழ்ச்சி பேனாவை எடு.. இன்று உங்களை சந்தோஷம் கொள்ளவைத்த பத்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுது.. சரியான நேரத்தில் விழித்தது, மனைவியிடம் இருந்து முத்தம் பெற்றது, தேவையான அளவு உடற்பயிற்சி செய்தது, நண்பர்களின் அரட்டை, வாட்ஸ் -அப் மற்றும் பேஸ்புக்கில் பார்த்தது, படித்தது.. இப்படி எதுவானாலும் இருக்கலாம். உங்களுக்கு எவை சந்தோஷம் தந்திருந்தாலும், அவற்றில் பத்து விஷயங்களை எழுது. எழுதிவிட்டீர்களா? சரி.. எவ்வளவு நேரத்தில் அந்த பத்து விஷயங்களை எழுதினீர்கள்? அந்தக் கால அளவையும் குறித்துக்கொள். பேப்பரையும், பேனாவையும் ஐந்து நிமிடங்கள் அப்படியே தள்ளிவைத்துவிட்டு, அடுத்த கேள்விக்கு விடை எழுத நீங்கள் தயாராகு. இன்று, மேலே எழுதிய அதே நேரத்திற்குள் நீங்கள் சந்தித்த பத்து எரிச்சல், வருத்தத்திற்குரிய விஷயங்களை எழுது. வாஷ்பேஷினை திறந்தபோது தண்ணீர் வராததோ, செல்போனில் தேவையற்ற அழைப்பு வந்ததோ, இட்லிக்கு சட்னி ருசியில்லை என்று கோபப்பட்டதோ, குழந்தைகளை திட்டியதோ.. எதுவாகவும் இருக்கலாம். அவற்றில் பத்து எதிர்மறையான விஷயங்களை எழுது. இப்போது விஷயத்திற்கு வருவோம். இரண்டு கேள்விகளில், எந்த கேள்விக்குக் குறைந்த நேரத்தில் நீங்கள் விடை எழுதினீர்கள்? மனம் ஒரு அழகான பாத்திரம். கோபதாபம், எரிச்சல், கவலைகளால் அந்தப் பாத்திரம் எப்போதும் நிரப்பப்பட்டிருந்தால், மகிழ்ச்சியை அங்கே வைக்க இடமிருக்காது. சோகங்கள், துக்கங்கள், எதிர்மறையான எண்ணங்கள் வெளியேற்றப்பட்டு, மனப்பாத்திரம் காலியாக இருந்தால்தான் மகிழ்ச்சியை நிரப்ப முடியும். உங்கள் குழந்தையிடம் காமெடி கதாபாத்திரம் நிறைந்த சித்திரக் கதை புத்தகம் ஒன்றை கொடுங்கள். உற்சாகமாக அதை பெற்று, படித்துக்கொண்டிருக்கும். அதை வாங்கிவிட்டு பள்ளிப்பாடப் புத்தகத்தை கொடு; உடனே அதன் முகம் சோர்ந்துவிடும். உங்களையே எடுத்துக்கொள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் என்றால் அதில் உற்சாகம் வந்துவிடும். அலுவலக வேலையை அதே உற்சாகத்துடன் உங்களால் செய்ய முடிவதில்லை. காரணம் என்ன, மன ஈடுபாடுதான். கதைப்புத்தகத்தில் ஈடுபாடு காட்டுவதுபோல் பாடப்புத்தகத்திலும் உங்கள் குழந்தை ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டால், அது பாடப்புத்தகத்தையும் உற்சாகமாக படிக்கத் தொடங்கிவிடும். அங்கே அது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக மாறிவிடும். நீங்கள் விளையாட்டில் காட்டும் ஈடுபாட்டை வேலையிலும் காட்டத் தொடங்கினால், உங்களது அலுவலக வேலையும் மகிழ்ச்சிக்குரியதாகி விடும். அலுப்பு ஏற்படாது. |
Comments