யூபிஎஸ்சி தேர்வில் சாதித்த பெண்கள் தொடர் 2
யூபிஎஸ்சி தேர்வில் சாதித்த பெண்கள் தொடர் 2
"உங்களை தாங்கிப் பிடிக்கும் முதல் நபராக நீங்கள் தான் இருக்க வேண்டும்" - பூர்ண சுந்தரி
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பூர்ண சுந்தரியின் வெற்றி, உடல்ரீதியாக உள்ள குறைபாடுகள் தங்கள் இலக்கை அடைவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். பார்வைத்திறன் அற்ற பூர்ண சுந்தரி, 4-வது முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வில் அனைத்திந்திய அளவில் 286-வது ரேங்க் பெற்று வென்றுள்ளார். 25 வயதான பூர்ண சுந்தரிக்கு, யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதிலேயே பல சிரமங்கள் இருந்துள்ளன. அவரிடம் பேசினோம்.
பூர்ண சுந்தரி
"அம்மா - ஆவுடைதேவி, அப்பா-முருகேசன். அப்பா, விற்பனை நிர்வாகியாக உள்ளார். அம்மா வீட்டில் இருந்து எனக்கு படிப்பில் பக்கபலமாக இருந்தார். 2 ஆம் வகுப்பு வரை அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன். அதன்பிறகு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பார்வைத்திறன் குறைய ஆரம்பித்தது. அதனால், சிறப்பு ஆசிரியர்கள் உள்ள ஒருங்கிணைந்த பள்ளியில் சேர்ந்து படித்தேன். 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தேன். பள்ளி முடிந்தாலும் சிறப்பு ஆசிரியர்கள் எனக்கு மாலையில் வகுப்புகள் நடத்துவார்கள். பள்ளிப்பாடங்களை 'பிரெய்லி' முறையில் எழுத எனக்குப் பயிற்சி அளிப்பார்கள். 'டேப் ரெக்கார்டரில்' பாடங்களை பதிவு செய்து வீட்டில் படிப்பேன்.
11-ம் வகுப்பு படிக்கும்போது, அறிவியலில் எனக்கு ஆர்வம் இருந்தும், செய்முறை பயிற்சிகளை என்னால் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது. அதனால், வணிகவியல் பிரிவில் படித்தேன். எனக்குப் பிறகு அந்த பிரிவு மிகவும் பிடித்துவிட்டது. சிறப்பாக படித்தேன்.
12-ம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முழுமையாக பார்வைத்திறன் போய்விட்டது. அதன்பிறகு, மதுரை பாத்திமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்தேன். முதல் தலைமுறை என்பதால் உதவித்தொகை மூலமே கல்லூரிப் படிப்பு வரை படித்தேன். அதனால் அப்பாவின் வருமானம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது.
2012-ல் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை பெற்ற முதல் 'பேட்ச்' நாங்கள் தான். இப்போது வரை நான் அந்த மடிக்கணினியில் தான் படிக்கிறேன். 8 ஆண்டுகளாக எனக்கு முழுதும் பலமாக இருந்தது அந்த மடிக்கணினிதான். மடிக்கணினியை 'ஆன்' செய்ததிலிருந்து 'ஷட் டவுன்' செய்வது வரை ஒலி வடிவில் அனைத்தையும் சொல்லும் வடிவிலான மென்பொருள் அதில் இருக்கிறது. அந்த மடிக்கணினி எனது மிகப்பெரும் பலம். நான் தமிழ்நாடு கிராம வங்கியில் கிளார்க்காக உள்ளேன். அதனால் பயிற்சிகளை மேற்கொள்வதில் பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்கள் ஏற்படவில்லை" என்கிறார், பூர்ண சுந்தரி.
குடிமைப் பணிகள் மீது தனக்கிருந்த ஆர்வம் குறித்தும் பார்வைத்திறன் இன்றி அதற்கான தேர்வுகளை எதிர்கொள்வதில் இயல்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பூர்ணசுந்தரி.
"11-12 ஆம் வகுப்பு படிக்கும்போது சமூகத்தில் மாவட்ட ஆட்சியரின் பங்கு குறித்து எனக்கு அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அதுகுறித்த தெளிவு இல்லை. கல்லூரியில் தான் யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என தோன்றியது. அப்போதுதான் சிவில் சர்வீஸ் என்பது மாவட்ட ஆட்சியர் பணி மட்டுமல்ல என்பது புரிந்தது. ஐஏஎஸ் என்றால் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, அதற்கடுத்த நிலைகளில் பல பணிகள் உள்ளன. அதன்மூலம் சமூகத்திற்கு பெரும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். பயிற்சிக்காக சென்னை செல்லும்போதுதான் பெற்றோர்கள் யோசித்தனர். நான் கஷ்டப்படக்கூடாது என நினைத்தனர். என்னை என்னால் கவனித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் சென்னை சென்றேன். நண்பர்கள் உதவுவார்கள். ஆனால் முழுதும் மற்றவர்களை சார்ந்திருக்க மாட்டேன்.
அம்மா, அப்பா காலையில் எனக்காக செய்தித்தாள் வாசித்துக்காட்டுவார்கள். 'இந்து தமிழின்' நடுப்பக்கங்களை தவறாமல் 'கட்' செய்து எடுத்துக்கொள்வேன். தமிழில் தான் முதன்மை தேர்வை எழுதினேன். தமிழ் இரண்டாம் தாளுக்கான புத்தகங்களை அம்மாவிடம் தான் கொடுத்து வைத்திருப்பேன். இலக்கியம், வரலாறு என எல்லாவற்றையும் அம்மா தான் வாசித்துக்காட்டுவார். தேர்வு நடக்கும்போது அம்மா என்னுடன் தான் தங்குவார்.
2016-ல் முதல்நிலை தேர்வில் தோல்வி. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை எழுதும்போது முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். 10-11 மதிப்பெண்களில் போய்விட்டது.
தோல்வியடையும்போது சோர்வாகி அழுதிருக்கிறேன். அன்றைய இரவே அடுத்தத் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்துவிடுவேன்.
என் நம்பிக்கையையும் உழைப்பையும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் நம்மை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் உங்களை தாங்கிப் பிடிக்கும் முதல் நபராக நீங்கள் தான் இருக்க வேண்டும். உங்களை முதலில் நீங்கள் தான் நம்ப வேண்டும்.
தேர்வுக்கான பயிற்சிகளின்போது நான் படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் ஆடியோ வடிவில் கிடைக்கவில்லை. அதனை சேகரிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியம் இருந்தது. அதற்கான புத்தகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆடியோ வடிவில் இருந்தன. ஆனால், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள், புவியியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல பாடங்களின் புத்தகங்கள் எனக்கு ஆடியோ வடிவில் கிடைக்கவில்லை.
அதன்பிறகுதான் என்னுடைய நண்பர்கள், தன்னார்வலர்கள் மூலமாக பாடக்குறிப்புகளை ஒலி வடிவில் பதிவு செய்து, அதனை என் செல்போனில் எழுத்து வடிவில் பதிவேற்றிக்கொள்வேன். செல்போனில் உள்ள என்விடிஏ (NVDA) செயலி, அதனை ஒலி வடிவில் எனக்கு சொல்லும்.
மனித நேயம் அறக்கட்டளை, சென்னை அடையாறில் உள்ள தமிழக அரசின் அனைத்து இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், ஃபோக்கஸ் பயிற்சி மையம், சங்கர் அகாடமி ஆகியவற்றில் பயிற்சிகள் மேற்கொண்டேன். அரசுப்பயிற்சி மையம் மிக அருமையான பயிற்சி மையம். நல்ல உணவு, நல்ல நூலகம் இருக்கும். சங்கர் அகாடமியில் நேர்காணலுக்கான பயிற்சிகளை எடுத்தேன்.
என்னுடைய ரேங்க்குக்கு ஐஏஎஸ் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. கிடைக்கவில்லையென்றால் மீண்டும் முயற்சிப்பேன். குடிமைப் பணியில், என்னுடைய முழு சக்தியையும் அதிகப்படுத்தி, கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தான் சமூகம் வளர்ச்சி பெறும். சமூக வளர்ச்சிக்கான இத்தகைய பணிகள் இன்னும் வீரியமாக வேண்டும்" எனக்கூறுகிறார் பூர்ண சுந்தரி.
பார்வைத்திறனற்ற பல மாணவர்கள், போதுமான வசதிகளின்றி உள்ளதால் அரசு அவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை மாவட்டம்தோறும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார், பூர்ண சுந்தரி.
"அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ வடிவில் புத்தகங்களை தயாரிக்க வேண்டும். பள்ளிகளிலும் இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிறப்புப் பள்ளிகள் மட்டுமல்லாமல் எல்லா பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சிறு வயதில் படிக்கும்போது அப்பாதான் என்னை சைக்கிளில் அழைத்துச் செல்வார். பள்ளிகள் இல்லாததாலேயே வீடுகளில் நிறைய மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். நிறைய பள்ளிகள் இருந்தால் அவர்கள் படிப்பார்கள்.
மாவட்ட அளவில் இதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். திருமங்கலத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா என்னிடம் தெரிவித்துள்ளார். படிப்பைத்தாண்டி மாற்றுத்திறனாளிகளுக்குப் பலவித திறன்கள் உள்ளன. அதனை வளர்த்தெடுக்கும் விதத்தில் மாவட்டம்தோறும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்" என்கிறார், பூர்ண சுந்தரி.
Comments