எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
புதுடில்லி: இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் எச்.சி.எல்., என அறியப்படுகிறது. நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடார் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் பதவி விலகியுள்ளதால், 38 வயதாகும் அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்.
டில்லியில் பிறந்து வளர்ந்த ரோஷ்னி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவர். 2019-ம் ஆண்டில் ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருன் தகவல் படி அவரது சொத்து மதிப்பு ரூ.31,400 கோடி ஆகும். 2017 முதல் 2019 வரை போர்ப்ஸ் வெளியிட்ட "உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் ரோஷ்னி இடம்பெற்றுள்ளார். பள்ளிப்படிப்பை டில்லியிலும், எம்.பி.ஏ படிப்பை அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யிலும் முடித்துள்ளார்.
2013-ல் எச்.சி.எல்., குழுவில் கூடுதல் இயக்குநராக சேர்க்கப்பட்டார். பின்னர் எச்.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சி.இ.ஓ., எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் வாரியத்தின் துணைத் தலைவர், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலரான இவர், தி ஹபிடேட்ஸ் அறக்கட்டளை என்ற ஒன்றை 2018-ல் உருவாக்கி நாட்டின் இயற்கை வாழ்விடங்களையும், பூர்வீக உயிரினங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்
.
Comments