முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி
வினையாகும் விளையாட்டு - முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலி
ரிச்சர்டு ரோஸ்
வாஷிங்டன்:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா நம்மை தாக்காமல் இருக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் மட்டுமே. ஆனால் முககவசம் அணிய மறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹீரோவாக எண்ணி அவரைப் போலவே மாஸ்க அணிய மறுத்துவரும் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது.
உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார். இந்த நிலையில், டிரம்பை குருட்டுத்தனமாக பின்பற்றிய ஒருவர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் (37), இவர் ஒரு தீவிர டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான ரிச்சர்டு, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார். சமூக ஊடக பிரியரான ரிச்சர்டு, ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார்.
ஆனால், ஜூலை 1ஆம் தேதி அன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பின்பற்றி வந்த ரிச்சர்டு, ஜூலை 4ஆம் தேதி பலியானார்.
Comments