30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்





30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்







 





கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





 

 




மொய் விருந்து



 


கீரமங்கலம்:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து விழா தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி பைங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கி நடந்தது. தற்போது ஆலங்குடி வரை மொய் விருந்து கலாசாரம் பரவியுள்ளது.

 


கடந்த ஆண்டு வரை 2 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. அதேபோல் சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு தொடர்பான தொழில் செய்பவர்கள், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு தனி நபரின் அதிக பட்ச மொய் வசூல் ரூ.5 கோடி வரை கடந்த ஆண்டு வசூல் செய்யப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில், விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் அழிந்ததால் கடந்த ஆண்டு மொய் வசூல் கணிசமாக குறைந்தது. அதாவது எதிர்பார்த்ததைவிட பாதி அளவே மொய் வசூலானது. இதில் பலரும் கடன் வாங்கி மொய் செய்தனர். பலர் மொய் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஓரளவு மொய் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனும், கனவுகளுடனும் விழா நடத்த வேண்டியவர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மொய் விருந்து விழா நடத்த இருந்தவர்களின் கனவு தகர்ந்து போனது.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதம் முழுவதும் மொய் விருந்து நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஒரு மொய் விருந்து கூட நடத்தப்படவில்லை.

இது குறித்து இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த காத்திருப்பவர்கள் கூறுகையில், விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மொய் விருந்துகளில் மொய் செய்து, 5 ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்தி மொத்தமாக வசூல் செய்வது வழக்கம். அந்த பணத்தை அவர்கள் திருமணம், தொழில், விவசாயம், கல்வி போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கஜா புயல் விவசாயத்தை அழித்தது. அதனால் கடந்த ஆண்டு மொய் விருந்து முடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விவசாய பொருட்கள், வாழைத்தார்கள் போன்றவற்றை விற்பனை செய்ய முடியவில்லை.

இதனால் இந்த ஆண்டு மொய் விருந்துகளை இதுவரை தொடங்க முடியவில்லை. தொடங்கினாலும் விவசாயிகள் மொய் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த இருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வருகிற தை மாதம் முதல் படிப்படியாக மொய் விருந்துகள் நடத்த ஆலோசித்து வருகிறார்கள். அந்த நேரத்திலும் மொய் வசூல் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.





 

 


 


 


















Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி