உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை
உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை - ஐ.நா. ஆய்வில் கணிப்புஉலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை நிகழும் என ஐ.நா. ஆய்வில் கணித்து உள்ளது. ஜூலை 11, 2020 13:45 PM
புதுடெல்லி உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவி உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது.
கொரோனா நெருக்கடி சர்வதேச அளவில் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் ஏற்படும் பாதிப்பு அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. உதாரணமாக, முன்னணி சுகாதார ஊழியர்களில் மிகப் பெரிய அளவில் பெண்கள் பங்கு வகிக்கின்றனர் என்பதை சொல்லலாம்.
உலகெங்கிலும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கும் நிலையில், கருத்தடை சாதனங்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஊரடங்கால் சுகாதாரத்தை பேணுவதற்கான போராட்டங்களுக்கு மத்தியில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் ஓரங்கட்டப்பட்டு, பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
சமீபத்திய யு.என்.எஃப்.பி.ஏ ஆராய்ச்சி (UNFPA research), தெரிவித்திருக்கும் சில கருத்துகள் உண்மையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடியதே.
கொரோனா பரவல் 6 மாதங்களுக்கு மேல் நீடித்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 114 நாடுகளில் சுமார் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடைகளைப் பயன்படுத்த முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்தால், மேலும் 20 லட்சம் பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
6 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு தொடர்ந்தால் கூடுதலாக 70 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான 3.1 கோடி வழக்குகளையும் எதிர்பார்க்கலாம் என்பது மிகவும் கவலைக்குரியது.
கொரோனாவின் தாக்கத்தால் யு.என்.எஃப்.பி.ஏ (United Nations Population Fund) வின் திட்டங்கள் சீர்குலையாமல் செயல்பட்டால் 2020 மற்றும் 2030க்கு இடையில் 20 பெண்களுக்கு பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைவு (female genital mutilation) மற்றும் 1.3 கோடி குழந்தை திருமணங்கள் தவிர்க்கப்படலாம்.
பெண்கள் பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக பணியாற்றும் விகிதம் அதிகம். அவர்கள் கொரோனாவினால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உலகளவில் கிட்டத்தட்ட 60 சதவிகித பெண்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள், அவர்களின் ஏழ்மை நிலை மேலும் மோசமாகும் வாய்ப்புகள் உள்ளன. பள்ளிகள் மூடப்பட்டிருப்பதும், வயதானவர்களை கவனித்துக் கொள்வதற்கான தேவைகள் அதிகரித்திருப்பதாலும், பராமரிப்பு பணிகளில் பெண்களின் ஊதியம் பெறாத பங்களிப்பு அதிகரித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களை கொரோனா தொற்றுநோய் கடுமையாக பாதித்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்துகிறது. கொரோனாவில் இருந்து ஒவ்வொரு நாடும் விரைவில் முக்தி பெறுவது அத்தியாவசியமானது. அதுதான் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் அடைகிறோமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
உலக மக்கள் தொகை 100 கோடியாக வளர நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது - பின்னர் இன்னும் 200 ஆண்டுகளில் அது ஏழு மடங்கு வளர்ந்தது. 2011 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. தற்போது, சுமார் 770 கோடியாக உள்ள மக்கள் தொகையானது, 2030 ஆம் ஆண்டில் சுமார் 850 கோடியாகவும், 2050 இல் 970 கோடியாகவும், 2100 இல் 1090 கோடியாகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் கருவுறுதல் விகிதங்கள் மற்றும் ஆயுளில் மிகப்பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. 1970 களின் முற்பகுதியில், பெண்கள் சராசரியாக தலா 4.5 குழந்தைகளைப் பெற்றனர்; 2015 ஆம் ஆண்டளவில், உலகத்திற்கான மொத்த கருவுறுதல் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகள் எனக் குறைந்தது. இதற்கிடையில், சராசரி உலகளாவிய ஆயுட்காலம் 1990 களின் ஆரம்பத்தில் 64.6 ஆண்டுகளில் இருந்து 2019 ல் 72.6 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இவை வெறும் புள்ளி விவரங்களோ அல்லது கணிப்புகளோ மட்டுமல்ல, இவை நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வருமான விநியோகம், வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்புகளை பாதிக்கும் காரணிகள் இவை. அதோடு, மக்கள் தொகையானது சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், நீர், உணவு மற்றும் ஆற்றல் ஆகியவற்றிற்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கான முயற்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.
எனவே, கொரோனா வைரஸ் பரவலானது மக்கள் தொகை பெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கொரோனாவால் மரணங்கள் ஏற்படுவது மட்டும் அதிர்ச்சியளிக்கவில்லை, அது உலக மக்கள் தொகையில் ஏற்படுத்தக்கூடிய அதிகரிப்பும் கவலையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இருக்கும் வளங்களை கொண்டு உலக மக்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி செய்து கொடுக்க முடியாத நிலையில், கொரோனாவின் தாக்கத்தால் மக்கள்தொகை பரவும் என்பது கொரோனாவின் நீண்ட கால தாக்கங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. |
Comments