தெருநாய்களுக்கு 10 ஆண்டுகளாக உணவளித்து வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

தெருநாய்களுக்கு 10 ஆண்டுகளாக உணவளித்து வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்


ஜூலை 22, 2020 14:15


 


ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நாய்களுக்கு உணவு அளித்த போது எடுத்த படம்.


பிள்ளையார்பட்டி:

சக மனிதர்களுக்கு உதவுவதற்கே யோசிக்கும் மனிதர்கள் வாழும் இந்த உலகில், தெருநாய்களுக்கு பத்து ஆண்டுகளாக தனது சொந்த செலவில் உணவளித்து வருகிறார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர். தெரு நாய்களின் பசிப்பிணியை போக்கி வரும் அவரது இந்த உன்னதமான பணி குறித்து பார்ப்போம்


 



தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நட்சத்திர நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் குணசேகரன். இவர், திருவாரூர் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறு வயது முதலே இவருக்கு தெரு நாய்கள் மீது கரிசனம் உண்டு.

தங்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் நேரம் தவறாமல் சாப்பாடு வழங்குவார்கள். ஆனால் தெரு நாய்களுக்கு யார் சாப்பாடு வழங்குவார்கள்?. அவைகளுக்கு யாராவது சாப்பாடு போட்டால் தான் உண்டு. கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தெருக்களில் படுத்து உறங்கி ஒவ்வொரு நாளையும் கழித்து வரும் இந்த நாய்கள், தங்களுக்கு யாராவது சாப்பாடு தரமாட்டார்களா? என்று ஒருவிதமான ஏக்கப்பார்வையுடன் தெருக்களில் சுற்றித்திரிவதை பார்க்கும்போதெல்லாம் இவருக்கு தெரு நாய்களின் மீது ஒருவித கரிசனம் ஏற்படும்.


பணியில் இருந்த காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்க தனக்கு கால அவகாசம் கிடைக்காததால் இவர், கடந்த 2009-ம் ஆண்டு பணி ஓய்வுக்கு பின்னர் நாய்களுக்கு உணவு வழங்குவதை தனது அன்றாட பணிகளில் ஒன்றாக்கிக்கொண்டார். இதனையடுத்து தனது சொந்த செலவில் 10 வருடங்களாக தெரு நாய்களுக்கு காலையில் ரொட்டியும், மாலையில் மசாலா கலந்த சிக்கன் ரைஸ் உணவும் வீட்டிலேயே தயாரித்து வழங்கி வருகிறார். தினமும் வீட்டில் இருந்து ரொட்டி மற்றும் உணவை எடுத்துச்சென்று வழங்குகிறார். கையோடு ஒரு பால் டப்பாவையும் கொண்டு செல்கிறார். எங்கேயாவது நாய்க்குட்டிகளை பார்த்து விட்டால் போதும். அந்த நாய்க்குட்டிகளுக்கு தான் கொண்டு செல்லும் பால் பாட்டிலில் இருந்து பால் வழங்குகிறார்.

நாள் தவறாமல் இவர் காலையும், மாலையும் தஞ்சை புதிய பஸ்நிலைய பகுதியில் உள்ள சரபோஜி கல்லூரி மற்றும் அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும். இவரை பார்த்ததும் அந்த நாய்கள் ஓடிவந்து இவரை சுற்றி நின்று கொள்ளும். ஒவ்வொரு நாய்க்கும் இவர் தனித்தனியாக உணவு வழங்கி அவை சாப்பிடுவதை பொறுமையுடன் நின்று பார்த்து விட்டு செல்வார்.


ஒருநாள்... இருநாள் அல்ல, ஒரு மாதம்... இரு மாதம் அல்ல, தொடர்ந்து பத்து வருடங்களாக நாள்தோறும் காலையும், மாலையும் குறைந்தது 30-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இவர் உணவு வழங்கி வருகிறார்.


கொரோனா காலக்கட்டத்திலும் வாயில்லாத ஜீவன்களுக்கு இடைவிடாது ஒரு உன்னதமான பணியை இவர் செய்து வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும். சரபோஜி கல்லூரி மைதானத்திற்கு வந்து செல்லும் பெரியவர் முதல் சிறியவர் வரையிலான அனைத்து தரப்பினரும் இவரது மகத்தான பணியை பாராட்டி செல்கின்றனர்.









 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி