புயலின்போது விமான நிலைய ஓடுபாதையில் சறுக்கிய விமானம் -
புயலின்போது விமான நிலைய ஓடுபாதையில் சறுக்கிய விமானம் - வைரலாகும் புகைப்படம்
பதிவு: ஜூன் 04, 2020 02:08 IST
ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்
மும்பை விமான நிலையத்தில் நிசர்கா புயலின் வீசிய காற்றில் சிக்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு வெளியேறிய புகைப்படம் வைரலாகியது.
மும்பை:
அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல், மகாராஷ்டிராவின் மும்பை அருகே கரையை கடக்கும்போது வலுவிழந்தது. புயல் 90 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. அப்போது அங்கு கனமழை பெய்தது.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் நிசர்கா புயலின் வீசிய காற்றில் சிக்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு வெளியேறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி மகராஜ் விமான நிலையத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்துக்கு உள்ளான சரக்கு விமானம் பெட் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.
பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி சரக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு பெட் எக்ஸ் நிறுவனத்தின் விமானம் வந்தது. அப்போது மும்பையில் புயல் வீசியது.
விமான நிலையத்தின் ரன்வே முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. பெரிய அளவில் காற்றும் வீசியது. பலத்த காற்று வீசிய நிலையில் ஆடிக்கொண்டே இறங்கிய விமானம் சறுக்கியபடி ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது.
ஆனாலும் சுதாரித்துக் கொண்ட விமானி அந்த விமானத்தை ஓடுபாதைக்கு வெளியே புல் தரையில் நிறுத்தினார். இதில் அந்த விமானம் சேதம் அடையவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு தற்காலிகமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Comments