பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்' : 'சொமேட்டோ' பணியாளர்கள்
'பட்டினி கிடப்போம் துரோகம் இழைக்கமாட்டோம்' : 'சொமேட்டோ' பணியாளர்கள்
28-06-2020
கோல்கட்டா: 'சொமேட்டோ' ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தில் சீன நிறுவனம் முதலீடு செய்துள்ள காரணத்தால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் எதிரப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008 ம் ஆண்டு ஹரியானாவின் கிர்கானை தலைமையகமாகக் கொண்டு 'சொமேட்டோ' நிறுவனம் துவங்கப்பட்டது. பங்கஜ் சட்டா மற்றும் திபீந்தர் கோயல் என்ற இருவர் இந்த நிறுவனத்தை துவக்கினர். தற்போது இது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனமாக உள்ளது. 2018 ம் ஆண்டு சீனாவின் அலிபாபா குழுமத்தின் ஆன்ட் பினான்ஸியல் நிறுவனம் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தில் 14.7 சதவீத பங்குகளையும் அலிபாபா நிறுவனம் கையகப்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் லடாக்கில் நமது ராணுவ வீரர்கள் சீனர்களுக்கு எதிரான சண்டையில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியாவில் சீன பொருட்களுக்கும், சீன நிறுவனங்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சீன நிறுவனத்தின் முதலீடு இருப்பதால் 'சொமேட்டோ' பணியாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அதில் பணி புரிந்து வந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பணியிலிருந்து விலகி உள்ளனர். தெற்கு கோல்கட்டா பகுதியில் பெகலா போலீஸ் நிலையம் முன்பாக கூடிய அந்நிறுவனத்தின் பணியாளர்கள் 'சொமேட்டோ' பெயர் அடங்கிய பனியன்களை தீயில் இட்டு கொளுத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் தீபக் அஞ்சலி, ' நாங்கள் இந்த நிறுவனத்தை புறக்கணிப்பது போல மக்களும் புறக்கணிக்க வேண்டும். தேசத்துக்காக நாங்கள் பசியுடன் இருக்க தயார். ஆனால் துரோகம் இழைக்க மாட்டோம். நமது பணத்தை பயன்படுத்தியே நம் ராணுவத்தினரை அழிக்க நாம் அனுமதிக்கலாமா இன்று முதல் நாங்கள் 60 பேர் பணியிலிருந்து விலகி விட்டோம். 'சொமேட்டோ' ஆப்பை எங்கள் மொபைலில் இருந்து நீக்கி விட்டோம்' இவ்வாறு அவர் கூறினார்.
Comments