முகக்கவசம் அணியாத்தற்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் - பிரேசில் அதிபருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முகக்கவசம் அணியாத்தற்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் - பிரேசில் அதிபருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜூன் 24, 2020 05:23
பிரேசில் அதிபர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீறினால் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாஸ்க் அணியாமல் இருக்கும் பிரேசில் அதிபர்
ரியோ டி ஜெனிரோ:
உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியிலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தீவிரமடைந்து வந்தாலும் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சோனரோ வைரசை கட்டுப்படுத்துவதில் மிகுந்த மெத்தனபோக்கை கடைபிடித்து வருகிறார். கொரோனா பரவத்தொடங்கியபோது இது ஒரு சிறிய காய்ச்சல் தான் என அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரேசிலில் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிபர் போல்சோனரோ பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தார்.
அதிபர் முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். அதிபரை பின்பற்றி பலரும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொள்ளாமல் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாம் ஆகையால் அதிபர் முகக்கவசம் அணிய உத்தரவிடக்கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆகையால், இந்த உத்தரவை பின்பற்றி அதிபர் போல்சோனரோ தனது வீட்டை விட்டு வெளியேறி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் அதிபர் போல்சோனாரோ விதிமுறைகளை மீறும் பட்சத்தில் 2 ஆயிரம் ரியல்ஸ் ( இந்திய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
சமுதாய இடைவெளியை கடைபிடிக்காமல், கோவில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கும்பலாக பங்கேற்கும் நம்ம ஊரு அமைச்சர்களுக்கு இது பொருந்துமா என்ற கேள்வி எழுப்பாதீர்கள். எழுப்பினால், தேசத் துரோகி என்ற பட்டம் சூட்டப்பட்டு, நடவடிக்கை தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Comments