பூஜைக்கேத்த பூவிது

🌺பூஜைக்கேத்த பூவிது🌺


சிவப்பு நிறப் பூக்கள் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது.


நாம் இறைவனுக்கு அன்றாடம் பூஜை செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது இந்த மலர்கள் தான். நாம் ஏன் இறைவனுக்கு இந்த மலரை சமர்ப்பிக்கின்றோம். மலரில் உள்ள நறுமணமும், அதன் அழகான தோற்றமும், நம் மனதில் உள்ள இறைவனின் பக்தியும் சேர்ந்து நாம் செய்யும் பூஜையின் அழகினை இன்னும் மெருகேற்றும். அதிலும் அந்தந்த இறைவனுக்கு உகந்த மலர் சூட்டி வழிபடுவதால் நமக்கு கிடைக்கின்ற நிறைவானது அதிகம் இருக்கும். அந்த மன நிறைவானது நமக்கு இறைவனின் அருளை முழுமையாகப் பெற்று விட்டோம் என்பதை உணரவைக்கும்.


மலர்களை சமர்ப்பிக்கும் முறை


மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களைக் கொண்டு எடுத்து சமர்ப்பிப்பது நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள இறைவனுக்கு தினமும் மலர் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டிலேயே ஒரு செடி வளர்த்து, புதுப்பொலிவுடன் அந்தப் பூக்களைப் பறித்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது இன்னும் சிறந்தது. இறைவனுக்காக பறிக்கப்படும் பூக்களை குளித்து விட்டுத்தான் செடியில் இருந்து பறிக்க வேண்டும். மலர்களை மாலை நேரத்தில் பறிக்கக்கூடாது பூக்களை பறிக்கும் போது செடிக்கு நமது நன்றியை தெரிவித்து விட்டு தான் பறிக்க வேண்டும்.


விநாயகர்


சிவப்பு நிறப் பூக்கள் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது. இதைத் தவிர தாமரை, ரோஜா, மல்லிகை, சாமந்தி இவைகளை சமர்ப்பிக்கலாம். அருகம்புல் விநாயகருக்கு உகந்தது. கணபதி பூஜை செய்யும்போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகள் கொண்டு பூஜிக்கப்படுகின்றது.


சிவபெருமான்


சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்கள் மிகவும் பிடிக்கும். மகிழம் பூ, தாமரை, ஊமத்தம் பூ, பாரிஜாதம், செவ்வரளி, இவைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கலாம். சிவனின் பூஜையில் வில்வ இலை முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சி அறித்த வில்வ இலைகளை பூஜைக்கு பயன்படுத்த வேண்டாம். சிவனுக்கு படைக்கும் எல்லா மலர்களும் பார்வதிதேவிக்கு உகந்தது. சிவனுக்கு தாழம் பூ வைக்கவே கூடாது.


துர்க்கை


சிவப்பு நிற மலர்களை துர்க்கைக்கு சமர்ப்பணம் செய்யலாம். தாமரை, குண்டு மல்லி, அரளி போன்ற வாசனை உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


விஷ்ணு


விஷ்ணுவிற்கு தாமரை மலர் மிகவும் பிடித்தது. தாமரை, குண்டுமல்லி, சம்பங்கி இவர்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம். விஷ்ணு பூஜையில் துளசி முக்கிய பங்கு வகிக்கின்றது.


மஹாலக்ஷ்மி


தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மிக்கு தாமரை பூ தான் சிறந்தது. சாமந்தி, ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


நாம் காலை நேரங்களில் பூஜை செய்வதாக இருந்தால் தாமரை, துளசி, மல்லி, நந்தியாவட்டம், மந்தாரை, முல்லை, செண்பகம் புன்னாகம் இந்த பூக்களை வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.


நடுப்பகலில் பூஜை செய்வதாக இருந்தால் வெண்தாமரை, அரளி, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம் இவைகளை உபயோகித்துக் கொள்ளலாம். ராகுகாலத்தில் வெள்ளிக்கிழமையில், செவ்வாய்கிழமையில் துர்க்கைக்கு அரளி பயன்படுத்திக்கொள்ளலாம்.


மாலை நேரத்தில் பூஜை செய்வதாக இருந்தால் மல்லி, முல்லை, ஜாதி, மரிக்கொழுந்து, வெட்டிவேர், துளசி, வில்வம் நந்தியாவட்டம், புன்னாகம் போன்ற பூக்கள் கிடைக்கும் பட்சத்தில் மாலை பூஜைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


செய்யக் கூடாதவை


பூக்களை மொட்டுக்களாக இறைவனுக்கு சமர்ப்பிக்க கூடாது. சம்பங்கி மற்றும் தாமரையை மொட்டாக பயன்படுத்தலாம். தானமாக வாங்கிய பூக்களை இறைவனுக்கு படைக்க கூடாது. பூக்களை பறித்த பிறகு சுத்தமான நீரில் கழுவிய பின் தான் இறைவனுக்கு படைக்க வேண்டும். பூச்சிகள் அறித்த பூக்களை இறைவனுக்கு பூஜைக்காக பயன்படுத்த வேண்டாம். துளசி இலைகளை சங்கராந்தி மாலை நேரத்திலும், அமாவாசை, பவுர்ணமி தின மாலை நேரத்திலும் பறிக்கக்கூடாது. 


               


           


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி