புகைப்படங்கள் பார்த்து என்னவென்று கண்டு பிடியுங்கள்
புகைப்படங்கள் பார்த்து என்னவென்று கண்டு பிடியுங்கள்
இந்த புகைப்படங்கள் பார்த்து என்னவென்று கண்டு பிடியுங்கள்
=====================================================
என்றும் இயற்கையோடு இணைந்திருப்போம்
- தேசிய தொழில்நுட்ப தினம்
ஒரு தகவலைப் பெறுவதற்காகத் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, நேற்றைய தினம் அனுப்பிய படங்கள் கண்ணில் பட்டன. அந்தப் படங்கள் மிகவும் விநோகமாக இருந்த்தால் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் புதிராக அப்படங்களை வெளியிட்டேன். தற்போது தீய தொற்று உலகெங்கும் பரவியுள்ள நிலையில், வல்லரசு என்று பறைசாற்றிக் கொண்டிருந்த நாடுகளெல்லாம் திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றன நோயால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியாமல் என்ன செய்வதென்றும் தெரியாமல். திணறிக் கொண்டிருக்கின்றன.
நம் அனைவருக்கும் இயற்கை உலகிற்கும், இணைய அல்லது மாய உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று, அதாவது மே 11ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் காரணமாக உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது. ஆனால் இப்போதுள்ள கொடிய நோய்த் தொற்று காரணமாக நாமெல்லாம் ஊரடங்குக்கு உட்பட்டு தனித்திருக்கிறோம். ஆகவே, எந்த விழாவிற்கும் இடமில்லா நிலை ஏற்பட்டிருக்கிறது.
இயற்கையோடு இணையாமல், சொகுசான வாழ்க்கை, வசதிகளுக்காக, உழைப்புக்கு மதிப்பளிக்காமல், எல்லாவற்றையும் இயந்திரமாக்கிவிட்டு, 10 அடி தூரத்திலிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியின் பொத்தானைக் கூட நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே இயக்க வேண்டுமென்ற அளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ள நாம் இயற்கைக்கு எதிராகப் போராட முடியாது என்ற காரணத்தினால்தான் அப்படங்களை அனுப்பினேன்.
அப்படங்கள் அனைத்தும், 1934 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் அமெரிக்காவில் வீசிய தூசிப் புயலின் படங்களாகும். அப்படங்கள் அன்றே எடுக்கப்பட்டதா அல்லது பின்னர் வெளிவந்த திரைப்படங்களில் வந்த காட்சிகளின் படங்களா என்பதை நிருபிக்க ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், அப்படங்கள் அன்றே எடுக்கப்பட்டதாகத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தூசிப் புயல் அமெரிக்காவின் மத்திய மேற்கிலிருந்து 1,500 மைல் தொலைதூரத்திற்குப் பரவியது என்பது உண்மை. குறுக்களவில் 900 மைல்கள் பரவியிருந்தது. அந்தப் புயலின் உயரம் 2 மைலாகும். இந்தப் புயல் ஏற்படக் காரணம், புல் விளைந்திருந்த வயல் நிலங்களை அழித்து கோதுமை பயிரிட்டதால், பின்னர் ஏற்பட்ட இயற்கை மாறுதல்களால் தரை வறண்டு போய் தூசிகள் மேலெழும்பி ஒரே நேரத்தில் தூசிப் புயலாக மாறியது என்பது உண்மை.
அன்றைய அடுத்தடுத்த நாட்களில் வெளி வந்த பத்திரிகைகளில் இந்த தூசிப் புயல் பற்றி விளக்கமாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்தன.
மேலும் விரிவான விவரங்கள் தொடரும்.
Comments