தேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும் 

தேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும் 


 


 - கதை


 


மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்குப் புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை சிரமப்பட்டு சொல்றது,   நம்மைதான் முட்டாளாக்கும் என்பதை உணர்த்தும் கதையை படியுங்கள்.



ஓர் ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும், வேதங்களையும், புராணங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரை ஓர் ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள், நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.


கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் அங்கு வந்தார், குரு. அவரை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர ஒரு குதிரைக்காரர் வந்திருந்தான். அவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில் வழி நெடுகிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் கூடியிருந்த அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டனர். குரு அங்கு வந்தபோது, யாருமே இல்லை. அவரும் குதிரைக்காரரும்தான் அங்கே இருந்தனர்.


மழையின் காரணமாக அங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி நடத்த முடியாது என்ற நிலையைக் கண்டதும், குருவுக்கு பெரிய ஏமாற்றம். ‘இங்கே குதிரைக்காரன் மட்டும்தான் இருக்கிறான். அவன் ஒருவனுக்காக நாம் பிரசங்கம் செய்ய வேண்டுமா?’ என்று நினைத்தார்.

            பின்னர் குதிரைக்காரரை நோக்கி, “இப்போது என்னப்பா செய்வது?” என்று கேட்டார், குரு.


அதற்கு அந்த குதிரைக்காரன், “எனக்கு எதுவும் தெரியாதுங்க. ஆனால் ஒன்ணுங்க.. நான் 30 குதிரைகள் வளர்க்கிறேன். அவற்றுக்குப் புல்லு வைக்கப் போகும்போது,  எல்லா குதிரைகளும் வெளியே போய், அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் இருக்குன்னு வச்சிக்கோங்க.. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுதான் திரும்புவேன்” என்றார்.


யாரோ தன்னை ஓங்கி அறைவதுபோல் இருந்தது, குருவுக்கு. அவர் குதிரைக்காரருக்கு ஒரு சபாஷ் சொல்லிவிட்டு, அவருக்கு மட்டும் தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம்,  நரகம்.. என்று சரமாரியாக பல விஷயங்களைப் பற்றி பேசி பிரமாதப்படுத்தினார்.


ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. உடனே குதிரைக்காரரைப் பார்த்து, “எப்படியப்பா இருந்தது என் பேச்சு”ன்னு பெருமை பொங்க கேட்டார், குரு.

            “ஐயா.. நான் குதிரைக்காரன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்று.. நான் புல்லு வைக்கப்போற இடத்திலே ஒரு குதிரைதான் இருக்கிறது என்றால், அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரே குதிரைக்கே கொட்டிட்டு வந்துவிட மாட்டேன்..” என்றார், அந்த குதிரைக்காரர்.

            குரு அதிர்ந்து போய்விட்டார்.


ஆம்.. மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்குப் புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை சிரமப்பட்டு சொல்றது,     நம்மைதான்   முட்டாளாக்கும். அதை குருவும் உணா்ந்துகொண்டார்.


 


செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி