வாழ்வை வசந்தமாக்கும் நல்ல எண்ணங்கள்
வாழ்வை வசந்தமாக்கும் நல்ல எண்ணங்கள்
27-05-2020 12:25
நமக்கு திருப்தியைத் தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களைக் குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும்.
வாழ்வை வசந்தமாக்கும் நல்ல எண்ணங்கள்
நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களை சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, இதைவிட கூடுதலாக கிடைத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், ‘மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள்.
சுருக்கமாக, நமக்கு திருப்தியை தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களைக் குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும்.
உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும்போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.
மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது.
பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை.
அடுத்தவர் முன் தன் மேதாவி தனத்தைக் காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால்தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது.
பூ விற்க வரும் பெண்மணியிடம் ‘பூ வேண்டாம்’ என்று சொல்வதை விரும்ப மாட்டார். நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதையே விரும்புவார். இதுவே நேர்மறை எண்ணம். என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது.
பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்து வதும் இத்தகைய எதிர்மறை எண்ணங்களே. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதும் இதனால்தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய்.
இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும்போது அசாதாரண சக்தி பெறுகிறது.
நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றைப் பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும்போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும்.
அதே போன்றே இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என் வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். எனவேதான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமேதான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை... இது போன்ற வார்த்தைகள். எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும் பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்.
உதய கிருஷ்ணா, 9-ம் வகுப்பு,
அரசு உயர்நிலைப்பள்ளி,
காந்திமாநகர்.
ஏற்கனவே இப்பொருள் பற்றிய கட்டுரையை நான் எழுதியுள்ளேன். வேறு சிலரும் எழுதியுள்ளனர். எனினும் இக் கட்டுரை இன்றைய மாமலர் பத்திரிகையில் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் எழுதியுள்ளான் என்பதால், அவனைப் போன்று மற்ற மாணவர்களும் எழுத வேண்டும், எழுத்தாளர்களாக வேண்டும் என்பதற்காக இதனை வெளியிட பரிந்துரைத் துள்ளேன் என்று குறிப்புடன் ஆசிரியருக்கு அனுப்புகிறேன். இதனை இணையப் பத்திரிகையில் சேர்ப்பதும் சேர்க்காததும் அவரது உரிமை.
Comments