செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்
செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
தி லேடி வித் தி லாம்ப் என்று புகழோடு அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200ஆவது பிறந்தநாள் இன்று. இந்த நாள் செவிலியர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்து ”அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே இருக்கிறது” என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டு பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக செவிலியர் படிப்பு முடித்து சேவையில் ஈடுபட்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்!
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் அவரது குழுவினர் நேரம் பார்க்காமல் கிரிமியன் போரின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இவர்களால் மருத்துவமனையில் இறப்பு சதவிகிதம் மூன்றில் இரண்டு பங்காக குறைந்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் திறனை பாராட்டி ராணி விக்டோரியா அவருக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். மேலும் கிரிமியன் போரின் தேவதை எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு வருடமும், செவிலியர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சேவையை எடுத்துச்சொல்லும் விதமாக செவிலியர் தினம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் அவதிப்பட்டு வரும் சூழலில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ஒவ்வொரு செவிலியருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு ஆறுதலாக செவிலியர்கள் உலகம் முழுவதும் இயங்கி வருகிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணிச்சுமை மற்றும் நோய் குறித்த பயம் ஆகியவற்றை கடந்து தினம்தோறும் நோயாளிகளுக்கு உதவி புரிந்து தங்கள் சேவையை தொடர்ந்து வருகிறார்கள். இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு பலரும் செவிலியர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
”இந்தியா முழுவதும் ஓய்வில்லாமல் நேரம் பார்க்காமல் உயிர்களை காப்பாற்ற செவிலியர்கள் உழைத்து வருகிறார்கள். வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்கும் முதல் வரிசை போராளிகள் இவர்கள். இவர்களுக்கு இந்த உலக செவிலியர்கள் நாளில் கொரோனாவிற்கு எதிரான இந்த போரில், மக்களை காக்க போராடும் அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்..
Comments