ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வு

ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம்


மே 30, 2020     20:08


ஜூன் 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.



4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.

இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஜூன் 8-ம் தேதி முதல் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்ஸ் திறக்க மற்றும் விருந்தோம்பல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


* ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி


* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி