சீகாழி சிவத்தலத்திற்குரிய பன்னிரு திருநாமங்களின் காரணச் சுருக்கம்

சீகாழி சிவத்தலத்திற்குரிய பன்னிரு திருநாமங்களின் காரணச் சுருக்கம் :


தோணியம்புரம் : பிரளய காலத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு சுத்தமாயையைத் தோணியாக்கி எழுந்தருளி வந்து தங்கி வீற்றிருக்கின்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது.


பிரமபுரம் : பிரமதேவரநேகர் பூஜை செய்து அருள்பெற்ற ஏதுவாற் பெற்றது.(பிரமதேவரநேகர் - பல பிரம்மாக்கள்)


சீகாழி : சத்தி பேதத்தின் அருள் காளியம்மையார் பசுபதியுடன் நடனஞ்செய்ததில் தோற்ற நிமித்தம், இப்பதியில் வந்து ஸ்ரீ பிரமேசரைத் துதித்தருள் பெற்றதால் எய்தியது இப்பெயர். ஸ்ரீகாளிபுரம் என்னும் பெயர் சீகாழி என மருவியது, அன்றியும் காளிதன் எனும் பாம்பு பூஜித்தருள் பெற்றதாலும் காளியம்புரம் என வந்ததுமொன்று.


வெங்குரு : அசுரகுருவாகிய சுக்கிரன் ஒருநாள் பிரமதேவர் சபைமுகத்தில் செருக்குடன் செல்ல, கோபித்து பிரமதேவர் வெறுப்ப, திரும்பி வந்து நாரதர் மொழிப்படி இப்பதியில் பூசித்து தேவகுருவுக்குச் சமமான குருத்துவம் வகித்தலால் இந்நாமம் வந்தது. பின்னும் தென்திசைக்கடவுளாம் தருமன் தன்னை நரகவாசிகள் நிந்தித்த காலத்தில் இத்தலம் வந்து பூசித்து, தன்னை நரகவாசிகள் கண்டவுடன் பூர்வவினை உணர்ச்சி பெற்று மௌனமாம் வண்ணம் அருள் பெரும் குருத்துவம் கொண்டமையாலும் இப்பெயர் பெறும்.


புகலி : சூரபத்மனால் துயருற்ற தேவர் முதலியோர் ஒருங்குகூடி வந்து, தேவரீரே புகலிடம் என்று பிரமேசரைத் துதித்தமையால் இந்த நாமம் சிறப்புறும்.


சிரபுரம் : தேவர் குழுவுடன் உண்ட அசுரனாம் சயிங்கிகேயன் என்பான் திருமாலான மோகினியின் சக்கரத்தால் மரித்து, இருகூறாக , தலைக்கூறு ஆகிய இராகு இப்பதியில் பூசித்து பகைவனாஞ் சூரியனை மறைக்க அருள்பெற்றமையான் இப்பெயர்பெறும்.


சண்பை : கிருஷ்ணரின் குலத்தினராம் யாதவர்கள் யாவரும் ஒருநாள் கூடித் தம்முள் ஒருவனைக் கர்ப்ப ஸ்த்ரீ போல் காட்டி, இவள் பெறுவது ஆணா பெண்ணா என்று கபில முனிவரைக் கேட்க நீராடப் போம் அவர், நும் வம்ஸத்தினர் யாவரும் நாசமாகும் ஓர் உலக்கை உதிக்கும் என்று கூற, அப்படிக்கிடைத்த உலக்கையைத் தூள் செய்து கடலில் கரைக்க, அவை முற்றும் நாணற்புல்லாய் முளைத்தன. பின்பொருநாள் யாதவர் யாவரும் தங்களுக்குள் கலகம் விளைவித்து ஒவ்வொரு நாணற்புல்லையும் பறித்து அடித்துக் கொண்டு சாபப்படி இறந்தார்கள். அச்சண்பை(நாணல்)யால் வரும் பழி தம்மைத் தொடராதபடி கிருஷ்ணர் இப்பதி வந்து பூசித்து அருள்பெற்றதால் இந்தப்பெயர் விளங்கும்.


கொச்சை : மச்சகந்தியோடு ஆற்றின் நடுவில் தோணியில் புணர்ந்த பராசரரை முனிவர்கள் கன்னிகாமிக் கள்வன் எனத் தூற்றினமையால் அப்பராசரர் இப்பதி வந்து பூசித்துக் கொச்சையாகிய பழி தம்மைப் பற்றாவண்ணம் அருள் பெற்றதால் இப்பெயர் விளங்கும்.


வேணுபுரம் : தவம்புரியும் சூரன், பதுமன் என்பவர்கள் முன் பிரமேசர் மூங்கில் வடிவாய் முளைத்து அருள் புரிந்தமையாலும், மூங்கில் வழியாக வந்து இந்திரன் பூசித்தமையாலும் இப்பெயர் பெறும். வேணு - மூங்கில்.


கழுமலம் : உரோமசமுனிவர் எப்பதிகளிலும் தொலையாத தம் மலத்தொகுதிகள் யாவும் இப்பதிவரவும் நீங்கப் பெற்றமையால் இப்பெயர் விளங்கும்.


புறவம் : சிபிச்சக்கரவர்த்தியைப் பரிசோதிக்கக் கடவுலருளால் வந்த இந்திரன் பருந்தாகவும் அக்கினி புறாவாகவும் சிபிமுன்போய் கலகம் விளைவித்து, புறாவின் நிறைக்குச் சமமாகத் துடையில் சதைமுற்றும் சிபிச்சக்கரவர்த்தி அரிந்து சுமத்தியும் சமமாகாததால் தாமேறவும் சரியாகப் பின் அவருள் இந்திரன் அருள்புரிய, அக்கினியாம் புறா சிபியின் தாகம் நீங்கக் காவிரி நீர் கொண்டுவந்தமையாலும், புறாவால் அரசர் புகழ் பெறலானும் இப்பெயர் தோன்றியது.


பூந்தராய் : இரணியாக்கன் ஒரு காலத்தில் தேவலோகத்தின் அமிர்தம் முதலிய நிதிகளைக் கவர்ந்து கொண்டும், பூவுலகவாசிகள் நிதிகளையும் கொண்டு போய் பாதாளத்தில் இருக்கவும், தேவர்கள் திருமாலிடம் இரக்க, அவர் சுவேதவராக(வெள்ளைப்பன்றி) உருவம் கொண்டு பூமியைக் கிழித்துச் சென்று அவனைக்கொன்று நிதிகளைச் சேர்த்தபின்னர், களிமேலிட்டு உலகினை வருத்தும் சுவேதவராகத்தின் முன் சுப்பிரமணியர் வந்தருள் புரிய, உணர்ந்ததும் காழியம்பதி வந்து வராகவுருக்கழித்துத் தம்முருவடைந்து அருள்பெற்றார். பூமியைக் கிழித்துச் சென்றதால் பூந்தராய் எனும் பெயர் விளங்கிற்று.


சீகாழிப்புராணம் என்னும் நூலில் இருந்து...இந்நூல் திருக்கையிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்து குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த மாசிலாமணிதேசிக மூர்த்திகளின் அருளாணைப்படி 1914 ஆம் ஆண்டில் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது.


மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி